தீயில் எரிந்தது இந்தித்திணிப்பு ஆணை – கைக் குழந்தைகளும் கலந்துகொண்ட போராட்டம்

சென்னையில் – இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆணையை எரித்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 31 (2017) அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி, “அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு”வின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகளுக்கு ஏற்பிசைவு வழங்கி கையெழுத்திட்டார்.

இதன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, அந்தந்த மாநிலங்களுடன் பேசி மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியில் பொது நிகழ்வுகளிலும், அவர்களுக்கு இந்தித் தெரிந்திருந்தால், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இதுபோன்ற 117 இந்தித் திணிப்புப் பரிந்துரைகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

சென்னை இந்திப் பிரச்சார சபையின் முன்பு இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு ஆணையை எரிக்கும் போராட்டத்தை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. தமிழ்நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டுமென்றும், தமிழை ஏற்காத இப்பள்ளிகளை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாதென்றும், இந்திய நாடாளுமன்றத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது.

இதன்படி, இன்று (08.05.2017) காலை சென்னை தியாகராயர் நகர் நடேசன் பூங்கா முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தமிழறிஞர்களும் ஒன்று கூடினர்.

“இந்திய அரசே! இந்திய அரசே! திரும்பப் பெறு! திரும்பப் பெறு! இந்தித் திணிப்பு ஆணையை திரும்பப் பெறு!”, “அனுமதியோம் அனுமதியோம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அனுமதியோம்!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து எழுப்ப, இந்திப் பிரச்சார சபை நோக்கி அனைவரும் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

பேரணியாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்பு அங்கேயே, பேரியக்கப் பொதுச் செயலாளர்
வெங்கட்ராமன் இந்தித் திணிப்பு ஆணையை தீ வைத்து எரித்துத் தொடங்கி வைக்க,அனைவரும் ஆணையை தீயிலிட்டுப் பொசுக்கினர். காவல்துறையினர் ஓடி வந்து ஆணை மீது தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர்.

இதனையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த ஊர்திகளில் ஏற்றினர்.

தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தமிழ்மகன், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் திரு. கோ. தமிழுலகன், புலவர் இரத்தினவேலவன், புலவர் அன்றில் பா. இறையெழிலன், இளந்தமிழகம் தோழர் இராசன்காந்தி, தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிச்சாமி, பொறியாளர் பொன். ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெண்ணாடம் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் (சென்னை), இரா. கனகசபை (பெண்ணாடம்), க. விசயன் (தருமபுரி), வெ. இளங்கோவன் (ஈரோடு), தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு. தூ. தூருவாசன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் க. வெற்றித்தமிழன், தென்சென்னை செயலாளர் மு. கவியரசன், சென்னை நடுவண் செயலாளர் சி. பிரகாசுபாரதி, புதுச்சேரி செயலாளர் வேலுச்சாமி, காஞ்சிபுரம் நடராசன், தொரவி தோழர் சிவக்குமார், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் அருள், மகளிர் ஆயம் இந்துமதி (பெண்ணாடம்), கனிமொழி, இரம்யா (சென்னை), சத்தியா, புதுக்குரல் (ஆவடி) உள்ளிட்ட திரளானவர்கள் குடும்பம் குடும்பமாகக் கைது செய்யப்பட்டனர்.

Leave a Response