இன்றைய நாளை குறித்துக் கொள்ளுங்கள் – பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் திடநம்பிக்கை

தமிழக பள்ளிக் கல்விச் சூழலில் தற்போது புதிய மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போதைய பள்ளிக் கல்வித்துறையின் செயலருமான திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., அப்படியொரு நம்பிக்கை ஒளிக்கீற்றை காட்டியிருக்கிறார்.

‘நீங்கள் நாட்குறிப்பு எழுதும் வழக்கமிருந்தால் இன்றைய நாளை குறித்துக் கொள்ளுங்கள்… நமது பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் இன்றிலிருந்து தொடங்குகிறது’ என்று தனது பேச்சின் தொடக்கமாக அவர் அறிவித்தபோது, அந்த அரங்கு முழுவதும் மெல்லியதாய் நிலவிய நிசப்தம் மாற்றத்திற்கான அறிகுறியாகவே உணர முடிந்தது.

வேறு எவர் இவ்வாறு பேசியிருந்தாலும் அதை வெறும் பேச்சாக மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பேன்… ஆனால் சொன்னவர், தமிழ் விழுமியங்கள் மீதும்… அறத்தின் மீதும் நம்பிக்கையும் பெரு விருப்பமும் கொண்ட திரு த.உதயச்சந்திரன் எனும்போது வெறுமனே அதைப் பேச்சாக கடந்து செல்ல இயலவில்லை.

இன்று தனியார் கல்விக்கூடங்கள் அனைத்தும் அந்த ஆண்டின் நிறைவில் பிள்ளைகளின் தேர்ச்சி அட்டையை அனுப்புகிறார்களோ இல்லையோ… அடுத்த ஆண்டிற்கான மலைக்க வைக்கும் கட்டணப்பட்டியலை அனுப்பிவிடுகிறார்கள்… இப்படியொரு இழிவான சூழலில் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கல்வித்துறை செயலர் பேசிய பேச்சு அழுத்தமான… எதிர்காலத்திற்கான வித்தாக அமைந்திருந்தது கண்டு பெரு மகிழ்ச்சி.

தமிழ்ச்சமூகத்தின் மீது உள்ளபடியே அவருக்கிருக்கும் அக்கறையை தனிப்பட்ட சில சந்தர்ப்பங்களில் அவரோடு உரையாடிபோதும் பழகியபோதும் உணர்ந்திருக்கிறேன்… மாற்றத்தை மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்பதை தனது தாகமாகவும் இலக்காகவும் கொண்டிருப்பவர்… ஆகையால் நம்புவோம் நல்லதே நடக்கும்… எதிர்கால மாணவ சமுதாயம் இனி நேர்பட நடக்கும் என்று பத்திரிகையாளர் இரா.சிவகுமார் எழுதியிருக்கிறார்.

அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டை முன்னிறுத்தி நான்கு நாள் பயிற்சி முகாம் மே 3 ஆம் நாள், மதுரை நாகமலையிலுள்ள பில்லர் மையத்தில் தொடங்கியது. பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து விழா பேருரை நிகழ்த்திய த.உதயச்சந்திரன் தனது உரையில்,

வகுப்பறையில் நிலவும் ஜனநாயகமே ஒட்டு மொத்த கல்விச் சூழலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த நிலையை நோக்கி தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை தற்போது அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் தமிழக பள்ளிக் கல்விச்சூழலில் பெரிய மாற்றத்தை அனைவரும் உணர முடியும்.

கல்வி அலுவலர்களுக்கான நான்கு நாள் பயிற்சி முகாமின் மூலம் நமது கல்வித்துறைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கற்றுக் கொள்வதன் மூலம் இதுவரை நாம் செய்யத் தவறியது என்ன என்பதையும் உணரப் போகிறோம்.

வகுப்பறையைத் தாண்டியும் ஒரு மாணவன் கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது. அது போன்ற ஒரு கல்வித் திட்டத்தை நாம் கொண்டு வர வேண்டிய தருணம் இன்று உருவாகியிருக்கிறது. நமது மாணவர்கள் பிற எந்த மாநிலத்தின் மாணவர்களுக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நாம் நிரூபிக்க வேண்டிய வேளை தற்போது வாய்த்திருக்கிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்பதைவிட, நமது எதிர்கால தலைமுறையை சிறப்பான முறையில் உருவாக்கக் கூடிய தேடுதல் களமாக இம்முகாம் அமைய வேண்டும்’ என்றார்.

Leave a Response