
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் போல் தொடர்ந்து அச்சுறுத்தியும், விசாரணை கமிஷனில் யார் புகார் அளிக்க கூடாது என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மிரட்டி போலீசார் கடிதம் வாங்குகின்றனர் என பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜல்லிகட்டுக்காக மெரினாவில் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தமிழக அரசு பணிந்து அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால், மாணவர்கள் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது மெரினாவில் வன்முறை ஏற்பட்டு கலவர பூமியாக மாறியது.
இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.
அப்போது, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக கலந்து கொண்டேன். 7 நாட்களும் போக்குவரத்து சரி செய்தும், குப்பைகளை அகற்றியும் தான் போராட்டத்தில் தன்னார்வலராக இருந்தேன். கடைசி நாள் போராட்டத்தில் போலீசார் பெண்களை, குழந்தைகளைத் தாக்கியபோது பாதுகாக்கச் சென்றேன். அப்போது என்னை போலீசார் அடித்து, கால்களால் மிதித்து துன்புறுத்தினார்கள். நான் பலவந்தமாக தாக்கப்பட்டு சுயநினைவு இழந்தேன். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நிலவரம் சரியில்லாததால் அன்று மாலையே வீடு திரும்பினேன். பின்னர் போலீசார் மருத்துவமனை சென்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முகவரிகளை வாங்கி தொடர்ந்து என் வீட்டிற்கு வருவதும் என்னை விசாரிப்பதுமாக இருந்தனர். நான் வீட்டில் இல்லாதபோது நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து அழைக்க சொன்னார்கள். அந்த எண்ணில் நான் பேசியபோது, நீங்கள் போராட்டத்தில் தாக்கப்படவில்லை, போலீசார் உங்களை அடிக்கவில்லை என்று உங்கள் கைப்பட எழுதி கடிதம் கொடுங்கள் என போலீசார் மிரட்டினார்கள். நான் முடியாது என்றேன். இதையடுத்து நேற்று திரும்பவும் என்னை அழைத்து ஒரு கடிதத்தை காட்டினார்கள். அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இதுபோன்று கடிதம் தந்துள்ளனர். எனவே நீங்களும் கடிதம் தந்துவிட்டால் உங்களுக்கு நல்லது என மிரட்டினர். இது போன்று தொடர்ந்து இராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து மிரட்டல்கள் வருகின்றது. இன்று பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜர் ஆகும்படி எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணை கமிஷனில் போலீசாருக்கு எதிராக யாராவது எதாவது கூறிவிடுவார்களோ என போலீசார் தடயங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை படுகொலை செய்த ஆட்சிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடக்காமல் இருக்கவும் போலீசார் இது போன்று செயல்படுகின்றனர். கலாச்சாரத்துக்காக தமிழனாக போராட்டத்தில் ஈடுபட்டது தீவிரவாத குற்றமா? தீவிரவாதி போல் போலீசார் எனக்கு நெருக்கடி தருகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. விசாரணை கமிஷன் நீதிபதி பாதிக்கப்பட்ட இடங்களை மட்டும் தான் பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்டவர்களிடம் விரைந்து கருத்துக்களை கேட்க வேண்டும். போலீசாரின் தொடர் மிரட்டல்களை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


