
ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசை என்கிற தலைப்பில் ஈழ எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய கலந்துரையாடலை வாசகசாலை அமைப்பு நடத்துகிறது. தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலைத் தொடர்ந்து சயந்தனின் ஆறாவடு நூல் குறித்த கலந்துரையாடல் அக்டோபர் 15 அன்று சென்னையில் நடந்தது. அந்நிகழ்வு பற்றி அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தீபாலட்சுமியின் பதிவு…
நேற்று மாலை வாசக சாலை ஏற்பாடு செய்திருந்த, சயந்தனின் ஆறா வடு நூல் குறித்த பகிர்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
சில மாதங்களுக்கு் முன் தமிழ்நதி எழுதிய’பார்த்தீனியம்’ நாவலைத் தொடர்ந்து ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் இரண்டாவது நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாசகர் பார்வை’ வரிசையில் முதலில் பேசிய சரவணன் கோர்வையாக நூலினை அறிமுகம் செய்ததுடன், தன் பார்வையில் நூலின் நிறை குறைகளையும் தெளிவுற எடுத்துரைத்தார்.
போர் சூழந்த இறுக்கமான சூழலிலும், அகதிகளாய் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த கோவிலிலும் கூட எப்படி சாதி பதுங்கி இருந்து சர்ச்சைகளைக் கிளப்புகிறதென்பதை ஆசிரியர் கோடிட்டுக் காட்டி இருந்தாலும், இன்னும் பிரச்னைகள் இருந்திருக்கலாம், அவற்றை ஆசிரியர் தவிர்த்தாரா அல்லது நாவலில் அதற்கான இடமில்லையா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார்.
அடுத்து வந்த பேராசிரியர் மிதிலா ரெங்கஸ்வாமி தன் உரையை மிகவும் இயல்பாகத் தொடங்கி, ஒரு பேராசியருக்கே உரிய லாகவத்துடன் நூலினைத் திறனாய்வு செய்ததுடன், அதன் பல உள்ளர்த்தங்கள் குறியீடுகள் குறித்தும், பெண் போராளிகளின் பிற்கால சுயவீழ்ச்சிக்குத் தீர்வற்ற சமூகத்தினையும் நூல் குறிப்பிட்டிருப்பது குறித்துப் பாராட்டினார். மேலும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும் ஆசிரியர் எவ்வாறு வாசகர்கள் மனதில் பாதிக்கும்படி செதுக்கி இருந்தார் என்பதையும் விளக்கினார். சுவாரசியமான பாடத்தின் இடையே மணியடித்த ஏமாற்றம் ஏற்பட்டது அவர் பேச்சினை முடித்துக் கொள்ளும் போது.
இரண்டு சிறப்பான பேச்சாளர்களுக்கு அடுத்து பேசப் போகும் லேசான நடுக்கமும், அதே காரணத்தினால் உண்டான உற்சாகமும் கலந்திருந்த நேரத்தில் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.
தயார் செய்த குறிப்புகளில் எல்லாவற்றையும் பேசத் தவறினாலும் மனதில் முக்கியமாய்ப் பட்டதைச் சொல்லி விட்ட திருப்தி இருந்தது. (நூல் பற்றிய எனது பார்வையைத் தனிப்பதிவில் பகிர்கிறேன்.)
இறுதியாக இயக்குநர் கவிதா பாரதி. மேடைப் பேச்சுகள், இம்மாதிரியான கூட்டங்களை இலக்கிய மற்றும் சமூகத்தின் மீதான் அக்கறை ஒன்றே இலக்காக நடத்தும் வாசகசாலைக்கு நன்றி கூறத்தோன்றியது.
விரிந்த இலக்கியப் பார்வையுடன் நூலை அணுகியதுடன், முன்னர் பேசிய எங்களின் பல கேள்விகளுக்குப் பதிலை ஆராய்வதாகவும் இருந்தது அவரது உரை.
அந்த வகையில், அயலானின் புகைப்படங்கள் அதிக அளவில் முகநூலில் பகிரப்பட்டு நமது கண்ணீரை வரவழைப்பதும் செஞ்சோலையில் கொத்துக் கொத்தாக மாண்டு போன குழந்தைகள் விஷயத்தில் நடப்பதில்லை என்பதற்கு, நம்மை எது பாதிக்க வேண்டும் என்பதன் பின் இயங்கும் மிகப்பெரிய அரசியலை எடுத்துக் காட்ட முற்பட்டார்.
இயக்கம் இயங்கி வந்தவரை அங்கு சாதிப்பேய் ஆட்டம் போட இடம் கொடுக்கப்படவில்லை என்று திடமாக நிறுவிய அவர், தற்போது இலங்கையில் சிவசேனை தனது பிரசாரத்தைத் தொடங்கி கட்சி அமைப்பதில் தீவிரமாக இருப்பதன் ஒரே நோக்கம் தமிழர்களைச் சாதி அரசியலின் மூலம் மட்டுமே பூண்டோடு அழிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பதனால் தான் என்றார்.
மேலும், மக்களின் போர்க்குணத்தை எவ்வாறு நுகர்வுக் கலாசாரம் மழுங்கடிக்கிறது என்பது பற்றியும், நமது நேரங்கள் நம்மிடமிருந்து நமது செலவிலேயே பிடுங்கப் படுவது பற்றியும், செறிவான எடுத்துக்காட்டுகளுடன், எள்ளல்களுடன் அமைந்திருந்தது அவர் பேச்சு.
வாசகசாலையின் தொடர்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளுன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கார்த்திகேயனுக்கும் நன்றியுரை வழங்கிய அருணுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


