பிரதியுபகாரம் எதிர்பாராமல் துடிக்கிற இதயங்களை கோவையில் கண்டேன் – கவிஞர் தமிழ்நதி நெகிழ்ச்சி

கோவையைச் சேர்ந்த நாய் வால் இயக்கம் சார்பில் இயக்குநர் சமுத்திரகனி, எழுத்தாளர் தமிழ்நதி ஆகியோருக்கு கோவையில் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது.
நாய் வால் திரைப்பட இயக்கம் சார்பில் மறைந்த நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
அதேபோல், 2016-ஆம் ஆண்டுக்கான மணிவண்ணன் விருதை, அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கு அரசுப் பள்ளி மாணவி நறுமுகை வழங்கினார். இதையடுத்து, பார்த்தீனியம் நாவலுக்காக எழுத்தாளர் தமிழ்நதிக்கு எழுத்தாளர் பாமரன் விருதை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து கவிஞர் தமிழ்நதி எழுதியுள்ள பதிவு….

நேற்று (அக்டோபர் 16) கோயம்புத்தூரில் நடந்த, இயக்குநர் மணிவண்ணன் விருது வழங்கும் விழாவில், இயக்குனர் சமுத்திரகனிக்கு ‘அப்பா’ படத்திற்காகவும், எனக்கு ’பார்த்தீனியம்’ நாவலுக்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. இதை எழுதும்போதே நெஞ்சம் நிறைவில் ததும்புகிறது. அவ்வளவு சனங்கள்! அவ்வளவு நேர்த்தியான ஒழுங்கமைப்பு!! சலிப்புத் தட்டாத உரைகள். உற்சாகமான பார்வையாளர் பங்கேற்பு. சித்தார்த் (ச. தமிழ்செல்வனின் மகன். இவரும் நாய்வால் அமைப்பின் அங்கத்தவர்) பேசியது போல, ’கலையின் நோக்கம் மனிதத்தை நோக்கிச் செல்வதாக இருக்கவேண்டும்’ என்பதற்கிணங்க அந்தக் கூட்டம் அமைந்திருந்தது.
எனது ஏற்புரையின்போது ”இந்தக் கூட்டத்தில் பெருவாரியானவர்கள் இயக்குனர் சமுத்திரக்கனிக்காக வந்திருப்பீர்கள்” என்றேன். நான் கூறியது முற்றிலும் உண்மையன்று என்று கோவை சனங்கள் நிரூபித்தார்கள். நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை மணிநேரத்தின் பிறகே என்னால் அந்த மண்டபத்திலிருந்து வெளியேற முடிந்தது. அத்தனை அன்பு….! அத்தனை அக்கறை கலந்த விசாரிப்புகள்…! அத்தனை நெகிழ்ச்சி!
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கோவை வந்த நாகார்ஜூனன் என்ற நண்பரால் 30 புத்தகங்களை (பார்த்தீனியம்) மட்டுமே எடுத்துவர முடிந்தது. நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அத்தனை புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ”எங்களுக்குப் புத்தகம் கிடைக்கவில்லை” என்று பலர் என்னிடம் வந்து வருத்தத்தோடு கூறினார்கள்.
ஏறத்தாழ 400 பேர் வந்திருப்பார்கள். மண்டபம் நிறைந்து இரண்டு பக்கங்களிலும், சில பெண்கள் உள்ளடங்கலாக, நிறையப் பேர் நின்றுகொண்டிருந்தார்கள். திரும்பவும் சொல்கிறேன், இப்படியொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்வது இதுதான் முதல் தடவை. இதனை ஒழுங்கமைத்த, ‘நாய் வால்’ திரைப்பட அமைப்பினைச் சேர்ந்த இளைஞர்களையும், பாமரன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
எனக்கு அறிமுகமான நண்பர்கள் என்று பார்த்தால், சக்தி செல்வி, பாலநந்தகுமார், இசை, ஸ்ரீபதி பத்மநாபா, ஓசை செல்லா ஆகியோர் வந்திருந்தார்கள். மேடையில் போய் நின்று பார்க்கும் தியக்கத்தில் மறதி கூடிவிடுகிறது. எனது ஏற்புரையில் ஸ்ரீபதி பத்மநாபா, இசை, ஓசை செல்லா ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுப் போயின. இத்தனைக்கும் ஸ்ரீபதி பத்மநாபா இந்த விழாவின் அழைப்பிதழை வடிவமைத்தவரும் கூட. மூவரிடமும் இந்தப் பதிவின் வழி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் என்னுடைய அழைப்பை ஏற்று விழாவுக்கு வந்திருந்தார். ”பொதுவெளியிலே சண்டையிடாமல் எழுத்திலே கவனஞ் செலுத்துங்கள்” என்று, அவர் என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்வதை ஏற்புரையில் குறிப்பிட்டுப் பேசினேன். ”திரும்பத் திரும்ப அவர் நினைவுறுத்துவார். திரும்பத் திரும்ப நான் சண்டை பிடிப்பேன்” என்றும் ’ஒப்புதல் வாக்குமூலம்’ அளித்தேன். குணா கவியழகன், அகரன், தீபச்செல்வன், நான் ஆகிய நால்வரும் ஒருமித்த அரசியலால் இலக்கியத்தில் ஒருங்கிணைந்தவர்கள் என்று கூறினேன்.
இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் சகோதரி மற்றும் குடும்பத்தினர், யாழ் ஜோதி (பாமரனின் துணைவியார். வீட்டுக்கு வரவில்லை என்று உரிமையோடு கோபித்துக்கொண்டார்) கோவையை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இயக்குநர் சமுத்திரக்கனி (”புத்தகத்தைப் படித்துவிட்டு அழைத்துப் பேசுகிறேன்”என்றார்.), தினேஷ் கவிபாடி (இந்தத் தம்பி இரண்டு புத்தகங்களில் கையெழுத்து வாங்கினார்.), அகரனுக்கு அறிமுகமான ஒரு தோழி (பெயர் நினைவில்லை. மறக்கமுடியாத முகங்கொண்ட அவர், எனது கைகளைப் பற்றிக்கொண்டு ”நாங்கள் உங்களுக்காகவே வந்தோம்”என்றார். அவர் யாரையோ எனக்கு ஞாபகத்தில் கொணர்ந்தபடியால், மேடையிலிருந்தபடி அடிக்கடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.), தலைவரின் புகைப்படம் பதிந்த சுவர்க்கடிகாரத்தைப் பரிசாக அளித்த இளைஞர் ஒருவர், மயில்வண்ணன்-கயல்விழி (அவர்களது மகளும் எனது குட்டி விசிறியுமாகிய இலக்கியா), “நாய் வால்“அமைப்பினைச் சேர்ந்த இதர தோழர்கள், பேராசிரியரும் கவிஞருமாகிய எஸ்.பாபு (நினைவில் நிற்கும்படியான உரைவீச்சு மிக்கவர். பார்த்தீனியத்தின் வரிகள் பலவற்றை ஞாபகத்தில் வைத்துப் பேசியபோது மகிழ்ந்தேன்.), பெரியார் திராவிடக் கழக தோழர்கள், த.மு.எ.க.ச. தோழர்கள்… இன்னும் எத்தனையோ மனிதர்கள்… அவர்களது அறிமுகமும் அன்பும்… நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் நிறைந்து கிடக்கிறது மனம்.
“தோழமை“என்ற சொல்லுக்கும், “தோழர்“என்ற விளிப்புக்கும் மிகப் பொருத்தமானவர் பாமரன். கோவையில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் எங்களைக் கவனித்துக்கொண்ட விருந்தோம்பும் பண்பில் “சிறுவாணி“த் தண்ணீரின் ஈரம் கலந்திருந்தது. அவரும், “நாய் வால்“அமைப்பினைச் சேர்ந்த தோழர்களும் கோவையின் மத்தியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து “கம்யுன்“என்று சொல்லத்தக்கதான வாழ்வை வாழ்கிறார்கள். அந்த வீட்டை அவர்கள் “அறை“என்றே குறிப்பிடுகிறார்கள். ஆரோக்கியமான, அறிவார்த்தமான உரையாடல்களைச் சாத்தியப்படுத்துகிற வாழ்விடம் அது. இரண்டு அலமாரிகள் நிறைய புத்தகங்கள். அவற்றுட் பல இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடைய குடும்பத்தினரால் வழங்கப்பட்டவையாம்.
துாய வெண்ணிற வேட்டி-சட்டையும், அடர்ந்து வளைந்த நரைமீசையும், கூட்டத்தில் தனித்துத் தெரியக்கூடிய கம்பீரமான தோற்றங் கொண்டவருமாகிய (அவருக்கு எழுபது வயதிருக்கலாம்.) ஒருவர் மிகுந்த அன்போடு உரையாடினார். அறிஞர் அண்ணா உள்ளிட்ட ஐந்து முதலமைச்சர்களிடத்திலும்,“மேகலா“ ஸ்ரூடியோவிலும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தவரே அவர் என்பதை, என்னிடம் கையளிக்கப்பட்ட பத்திரிகைச் செய்தியிலிருந்து பிற்பாடு அறிந்துகொண்டேன். அவருடைய பெயர் காளியப்பன். என்னிடம் விடைபெறும்போது கைகூப்பியபடி கீழ்வருமாறு கூறினார்…
”இத்தனை அவலங்களுக்குப் பிறகும், இவ்வளவு அழிவுக்குப் பிறகும் நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள். உங்களுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கம்”
ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர்களையும் விளித்தே அவர் பேசினார். நாம் அடைந்திருப்பது வீழ்ச்சியென நான் அறிவேன். “தோல்வியன்று“என எம்மிடம் நாமே கூறிக்கொண்டிருக்கிறோம். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட கணத்தில், விழாக் கோல மண்டபம் மறைந்து, பெருங்காற்றில் எழுந்து அலைவுறும் துாசிப்படலம்போல ஏதேதோ நினைவுகள் மனப்பரப்பில் சுழன்றன. கண்கள் கலங்கின.
இந்த உலகில், பிரதியுபகாரத்தை எதிர்பாராமல், சகமனிதர்களை நேசிக்கிற, இதயங்கள் எங்கெங்கோ துடித்துக்கொண்டுதானிருக்கின்றன. அதை, கோவை நிகழ்ச்சி உணர்த்தியது.. இந்தக் காலை என்னமாய் குளிர்ந்துபோய்க் கிடக்கிறது. “வாழ்தல் இனிது“தான் சரவணன்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response