தமிழக மக்கள் சாராய அதிபர்களை முதல்வராக்கிவிட்டார்கள் – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சாராள், கிழக்கு தொகுதி வேட்பாளர் செங்கண்ணன் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது–

அரை நூற்றாண்டாக மக்களை ஆண்டு வந்த திராவிட கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் ஊழல், லஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மக்களின் தேவைகளான நீர், மருத்துவம், கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் தமிழகத்தில் தான் மக்கள் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற அரசாங்கத்தால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத அரசு தேவையா என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். அடுத்ததாக கல்வி கொடுக்க வேண்டியதும் அரசின் கடமை தான். ஆனால் அதனையும் அரசு கொடுக்க தவறிய காரணத்தால் அதுவும் சமூகத்தில் விலை போய்விட்டது.

தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் போல் தமிழகமும் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்ககை எடுக்கப்படும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது நிறைவேற்றப்படும். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து மருத்துவமும், மக்களின் அன்றாட தேவையான நீரும் இலவசமாக வழங்கப்படும்.

வேளாண் தொழில்கள் அரசு வேலையாக மாற்றப்படும். திருச்சி, கோவை, மதுரை, சென்னை, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் புதிய தலைநகரங்கள் ஆக்கப்படும். அதில் மதுரையில் 5–வது தமிழ்ச் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். விவசாய நிலங்கள் பாதுகாப்பப்பட்டு, விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும். பசி, பட்டினி, வேலையில்லை என்ற வார்த்தைகள் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். நீர் வளங்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் எதிர்கால மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எதிர்கால மக்களுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும்.

மணல், கல்வி, மலை அனைத்தும் சந்தைப் பொருட்களாக மாறிவிட்டன. அதனை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இனி வரும் காலங்களில் காற்று கூட பணம் கொடுத்து வாங்கும் நிலை உருவாகி விடும். விவசாயம் இல்லை என்றால் உலகத்தில் யாரும் உயிர் வாழ முடியாது. எனவே விவசாயத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். விவசாயி இல்லாமல் யாரும் இல்லை. விவசாயம் என்பது தெய்வத்தில் தொழில். அந்த தொழிலை பாதுகாப்பது நமது கடமை.

ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே அந்த கல்வியை நாம் தமிழர் கட்சி இலவசமாக வழங்கும். கல்வியை வியாபாரமாக்கும் நாடு என்றும் உருப்படாது. கல்வி, மருத்துவம் தான் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் திராவிட கட்சிகள் அதனை விட்டு விட்டு, ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி மக்களை அடிமைகளாக்கி வைத்து விட்டனர்.

தமிழனின் அடையாளம் அவனது தன் மானம் தான். ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ளது. அதில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். தமிழன் மானம் காக்கப்பட வேண்டும். தமிழகத்தை ஆண்ட சாராயக்காரர்களுக்கா உங்களது ஓட்டு?. எந்த மாநிலத்திலும் சாராய அதிபர்களை முதல்வராக்கவில்லை. தமிழக மக்கள் நான் சாராய அதிபர்களை முதல்வராக்கி சாதனை செய்துள்ளனர். வருகிற தேர்தலில் தமிழனின் அடையாளம், மானம் காக்கும் வகையில் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response