
2025 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைத்தது.இந்தக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டிருந்தார்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்.
இக்குழு,முதல்கட்ட அறிக்கையை அப்போதைய அரசிடம் சமர்ப்பித்தது.இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஒன்றிய – மாநில உறவுகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான விவகாரங்களை ஆய்வுசெய்து பரிந்துரைவழங்குவது, நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் அளிக்கப்பட்டன.
உயர்நிலைக் குழுவுக்கும், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்துக்கும் ஒப்படைக்கப்பட்ட பணிகளின் தன்மைக்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்ந்த தமிழக அரசு, உயர்நிலைக் குழுவை கலைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
உயர்நிலைக் குழு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, உயர்நிலைக் குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகளையும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது,ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த ‘சோப்ளாங்கி அரசு’ கலைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக – சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்திருப்பதன் மூலம் இந்த டம்மி முதல்வர் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை இரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? என்று உதயநிதி விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது…, ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவை மாநில அரசு கலைத்துள்ளதை சுட்டிக் காட்டி, “திரையரங்கு உரிமைகளுக்கு யெஸ், மாநில உரிமைகளுக்கு நோ” எனப் பதிவிட்டுள்ளார்.
மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி பெ.சண்முகம் கூறியதாவது…
மாநில அரசின் உரிமைகள் பாஜக அரசால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்தநிலையில் இந்தக்குழு அமைக்கப்பட்டது. இப்போதும் அந்த ஆபத்து தொடரும் நிலையில்,குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருக்கக் கூடாது என்றார்.
இந்திய பொதுவுடைமைக் கட்சி மு.வீரபாண்டியன் கூறியதாவது…
அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து வைத்துக் கொண்டு மத்திய அரசு,மாநில அரசுகளின் மீது அதிகார,ஆதிக்கம் புரிகிறது.இதை ஆராய கடந்த ஆட்சியில் நீதிபதிகுரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவைக் கலைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ‘ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு’ கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று விசிகவைச் சேர்ந்த இரவிகுமார் கூறியுள்ளார்.
நீதிபதி குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த த.வெ.க. அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டிற்கான வரலாற்றுத் துரோகம் என தமிழக மக்கள் முன்னணி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கையும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கும் தற்போதைய சூழலில், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவைக் கலைத்துள்ள த.வெ.க. அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
இது, தமிழ்நாட்டின் நீண்டகால உரிமைகளுக்கும், மாநில சுயாட்சிக் கோட்பாட்டிற்கும் இழைக்கப்பட்ட பச்சைத் துரோகமாகும்.
இராஜமன்னார் குழுவின் தொடர்ச்சியாக, மாநிலங்களின் நிதி உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், கல்வி உரிமைகள் மற்றும் வரவிருக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) ஆபத்துகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான வல்லுநர் குழு.
இக்குழு தனது முதல் கட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, அடுத்தடுத்த மிக முக்கியமான நகர்வுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளையில், அக்குழுவைக் கலைத்திருப்பது
மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் செயலாகும்..
முந்தைய அரசு கொண்டு வந்தது – என்கிற குறுகிய அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு,
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தகர்க்கத் துடிக்கும் இப்போக்கு, ஆளும் இந்திய ஒன்றிய பாசிச அரசுக்குத் தமிழக அரசு சாதகமாகச் செயல்படுவதான ஆபத்தான போக்காகும்.
தமிழகம் காலங்காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சட்டப்படியும், கோட்பாட்டுப் படியும் மீட்டெடுக்கும் வாய்ப்பை இந்த அரசு தனது கைகளாலேயே தடுத்தி நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகமுக்கியமான மாநில சுயாட்சி மற்றும் மாநிலங்களின் உரிமை மீட்புப் பணிகளை முடக்கியுள்ள த.வெ.க. அரசு, தனது இந்தத் தவறான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னணி சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு பொழிலன் கூறியுள்ளார்.
விஜய் அரசின் இந்த முடிவை பாஜக மட்டும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


