
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் சுகன்யாவை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளரும்,தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,தாராபுரம் நத்தப்பாளையம் பகுதியில் நேற்று பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது….
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும்.ஆனால், 107 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சி ஆட்சியில் உள்ளது.நீங்கள் வாக்களித்தது அதிமுகவிற்கு.ஆனால்,அவர் இப்போது எங்கே இருக்கிறார்? நம்முடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகள்,தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என காரணம் கண்டறிந்து,அவர்களுக்கு ஆதரவு அளிக்க சென்றனர்.ஒரு சிலர் சொல்லிவிட்டுச் சென்றனர்.ஒரு சிலர் முதுகில் குத்திவிட்டுச் சென்றனர்.இங்கும், இத்தொகுதி எம்எல்ஏ உங்கள் முதுகில் குத்திவிட்டுத்தான் போயுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நமது தயவால்தான் ஆட்சி நடக்கிறது.தவெக கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் சோபா சென்றது.அதிமுகவை இரண்டாகப் பிரித்துவிட்டார்கள்.ஏற்கனவே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் சத்தியபாமா இல்லை.அவர் பெட்டி பாமா என பெயரை மாற்றிவிட்டார்கள்.ஓட்டுக்கு பணம் தர்றோம் என நம்மைப் பார்த்து முதல்வர் விஜய் சொன்னார்.ஆனால்,அவர்,இங்கே `ஹோல்சேல்’ செய்துள்ளார்.பெட்டி பெட்டியாக கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில்,விரலில் வைத்த மை காயும் முன் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து விட்டார் இத்தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா… சாரி.., பெட்டி பாமா.. ராஜினாமா செய்த அவருக்கு நீங்கள் மீண்டும் வாக்களித்தால் உங்களுக்காகக் குரல் கொடுப்பாரா? சட்டமன்றத்தில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? மக்கள் குறைகளைத்தான் அங்கு பேசுவார்கள்.ஆனால்,ஆளும்கட்சி முதலமைச்சர் பேசுவதே இல்லை.புடிச்சு வைச்ச புள்ளையார் மாதிரி இருப்பார்.சட்டமன்றத்திற்குப் பதிலாக,பாட்டு மன்றம்தான் நடைபெறுகிறது.சபாநாயகர் ஆக்க்ஷன் என சொன்னதும் முதலமைச்சர் நடிக்கத் தொடங்கிவிடுகிறார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை பற்றிப் பேச அங்கு தவெக எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.முதல்வரை துதிபாட மட்டுமே இருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 தருவோம்,வருடம் 6 சமையல் காஸ் சிலிண்டர் தருவோம் என்றார்கள்.இதுவரை அதுபற்றிய பேச்சையே காணோம்.விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்றார்.அதிலும் ஏமாற்று வேலை.வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் அல்லது தண்ணீர் திறந்துவிடுங்கள் என நான் சொன்னேன்.உடனே,என் மீது வழக்கு ேபாட்டார்கள்.இப்போது,இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி என முதல்வர் ரிப்பீட் செய்கிறார்.அது யார் தெரியுமா? ஒன்று மின் வெட்டு – இன்னொன்று – அரிவாள் வெட்டு.இந்த இரண்டுக்கும் இடையேதான் போட்டி என நமது தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னார்.
இந்தத் தொகுதியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும்போதே மின்சாரம் போய்விட்டது.இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? பதவி ஏற்று 10 நாளில் ராஜினாமா செய்த பெட்டிபாமாவை வெற்றிபெற வைத்தால், சட்டசபைக்குச் சென்று பாட்டுதான் பாடுவார்.அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் மீண்டும் பொட்டி வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்து விடுவார்.அதனால், தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் மீண்டும் அந்தத் தவறை செய்துவிடாதீர்கள்.நமது வேட்பாளர் வக்கீல் சுகன்யாவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.அவர், உங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பார்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தாராபுரம் அருகே மூலனூரில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசுகையில்….
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் தானாக நடைபெறவில்லை.செயற்கையாக இந்தத் தேர்தல் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடந்து வருகிறது.கஜானாவில் பணம் இல்லை என்றார்கள்.தற்போது புதிய சட்டமன்றம் ரூ.1,200 கோடிக்கு கட்டுவோம் என அறிவித்துள்ளார்கள். அங்குதான் சட்டமன்றம் கட்டவேண்டும் என ஜோசியக்காரர் கூறியிருப்பார்.
இந்தக் கேடுகெட்ட ஆட்சியில்,திமுக கொண்டு வந்த திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.சில திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பார்த்து சந்தி சிரிக்கிறது.கடந்த 4 மாதத்தில் 500 கொலைகள் நடந்துள்ளன.கோவையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன.கடந்த ஒரு வாரத்தில் மதுரையில் 8 கொலைகள் நடந்துள்ளன.முதலமைச்சர் பிரசாரத்திற்கு சென்ற மதுராந்தகம் தொகுதியில் உள்ள வண்டலூரில் பள்ளிமாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், பாம்பு கடித்ததாகக் கூறி புகாரை வாங்க மறுத்துள்ளனர்.இந்த இலட்சணத்தில் ஆட்சி நடக்கிறது.
மதுராந்தகத்தில் போய் நடித்தார்.காட்டுக் கத்து கத்தினார்.அந்தக் காட்சியைப் பார்க்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.இரண்டு நாளில் மீண்டும் அதையே கதறுவார்.அப்போது பார்க்கலாம்.அங்கு அவர்,30 நிமிடம் பேசினார். இதில் 32 முறை திமுக திமுக என பேசினார்.நாங்கள்கூட அப்படிப் பேசமாட்டோம்.காரணம்,அவருக்கு அந்த அளவு நம் மீது பயம்
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


