தள்ளிப்போகும் இடைத்தேர்தல் – பதவி விலகியோர் கலக்கம்

ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய்,பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.

கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர்,விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர்,பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா,மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல்,தாராபுரம் சத்யபாமா ஆகியோரும் தங்களது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன,அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது எனக்கோரி,தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பாமஉ இன்பதுரை சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஊடகம் தொடர்பான இரண்டுநாள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.அதில்,தேர்தல் நடத்துவது எப்படி? அதன் விதிமுறைகள் என்ன,என்னென்ன மாதிரியான வழிமுறைகளில் தேர்தல் நடத்தப்படும் வாக்குச்சீட்டு எண்ணுவது எப்படி,எண்ணும்போது அதற்கான நடைமுறைகள் என்ன,அதிகாரிகளின் நடவடிக்கைகள் என்ன ஆகியவை குறித்து விளக்கமாக ஆலோசிக்கப்பட்டது.நேற்று நடந்த முதல்நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள்,அதாவது தேர்தல் நடைபெறும் விதிமுறைகள் உட்பட அனைத்து தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியதாவது….

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தற்போது எந்தவித ஆலோசனையும் நாங்கள் மேற்கொள்ள வில்லை.குறிப்பாக மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி ஆறுமாதம் வரைக்கும் அதற்கான அவகாசம் உள்ளது.எனவே தற்போது அதற்கான அவசரம் இல்லை.மேலும் காலியாக இருக்கும் தொகுதிகள் தொடர்பாக தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால்,இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உடனடியாக வராது என்பது தெரிகிறது.இது பதவி விலகிய உறுப்பினர்களுக்குப் பாதகமானது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்கள்.எனவே,பதவி விலகியவர்கள் கலக்கமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response