
மதுரை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று முன்தினம் மதுரை சென்றார்.அப்போது மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா,காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஒன்றிய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினார்.அதில்,நிர்வாக நடைமுறைகள்,மக்கள் குறைதீர்ப்பு பணிகள்,மின்னணு பயன்பாடு,நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தொற்று தடுப்புப் பணிகள்,கல்வித்துறை சட்டம்,ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர். மேலும்,நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர்,வைகையாற்றை சீரமைக்காவிட்டால்,ஆளுநர் மாளிகையே களமிறங்கும் எனக் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள அர்லேகர்,அரசுத்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.இதில்,அமைச்சர்கள் நிர்மல்குமார்,விஸ்வநாதன்,தேனி பாமஉ தங்கதமிழ்செல்வன்,மதுரை பாமஉ சு.வெங்கடேசன் மற்றும் சமஉக்கள்,ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா,காவல் ஆணையர் ராஜேந்திரன்,மாநகராட்சி ஆணையர் கவ்ரவ்குமார், உள்ளிட்ட அனைத்துத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை வகித்து சு.வெங்கடேசன் பேசியதாவது….
ஒன்றிய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமை,எங்களுக்கு மட்டும்தான் உள்ளது.அரசியல் சாசனப்படி 39 அமைச்சகங்களின் கீழ் செயல்படும் 96 துறைகளை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மட்டுமே ஆய்வு செய்யும்.சட்டப்படி குழுவின் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே ஆய்வு செய்யவேண்டும்.எங்களை தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர் அவரது துறையில் ஆய்வு செய்யலாம்.ஆனால்,பலதுறைகளில் ஆய்வு செய்வதற்கு,அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கியுள்ளது.எங்கள் உரிமையை வேறு யார் எடுக்க நினைத்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.ஒருவேளை யாராவது ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால்,எந்த அதிகாரிகளும் பங்கேற்கக்கூடாது.அதைமீறி பங்கேற்கும் அதிகாரிகள் மீது சம்மன் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும் இவ்வாறு பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது….
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்னைகள் மற்றும் இடையூறுகளை சரிசெய்து,வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்,அரசும் சட்டத்திற்குட்பட்டு எந்த திட்டங்களையும் ஆய்வு செய்யலாம்.ஆளுநர் எந்த திட்டங்களையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை.அதை எங்கள் அரசும் அனுமதிக்காது. எங்கேயாவது ஆளுநர்,அரசின் நிர்வாகத்திலோ அல்லது ஆய்வுசெய்யும் பணிகளில் ஈடுபட்டால் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும்.அதிகாரிகள் அரசின் அனுமதி பெறாமல்,அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது.ஆளுநர் ஆய்வு செய்வது என்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பின் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது….
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிலும்,அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் ஆளுநர் தலையிட அதிகாரம் கிடையாது.ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அவரின் அதிகாரம் ராஜ்பவனில் மட்டும்தான்.மற்றபடி எங்கும் தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை.ராஜ்பவனில் ஆளுநர் மட்டும்தான் இருப்பார்.அவருக்கு மூணு பிஏ,ஒரு செக்ரட்டரி தான் இருப்பார்கள்.ஆளுநர் மாளிகையில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும்.வைகையை தூர்வாருவதற்கு,ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு 2 வாரங்கள் ஆகியும் இதுவரைக்கும் அனுமதி வரவில்லை.அனுமதி வந்தவுடன் பணியை தொடங்குவோம்.
ஆளுநர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவாரா? மண்வெட்டியைக் கையில் எடுத்து தூர்வாருவாரா? நீர்வளத்துறை அதிகாரியிடம் அனுமதி பெறுவாரா? வைகையில் தூர் வாருவதற்கு எப்படிப் போவார்? லாரிகளை எடுத்துப் போய் தூர்வாருவாரா? ஆளுநர் மாளிகை எதைச் செய்யுமோ அதைமட்டும் செய்தால் போதும். தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையும் ஆளுநர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.எந்த அழுத்தத்திற்கும் இந்தஅரசு அடிபணியாது.ஆளுநர் உள்ளிட்ட யாருக்கும் அடிபணியாது.யாருக்கும் வளைந்து கொடுத்து இங்கு ஆட்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


