புதுச்சேரியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் – தொகுதிப்பங்கீடு விவரம்

புதுச்சேரியில், முதலமைச்சர் இரங்கசாமி தலைமையிலாம் என்.ஆர்.காங்கிரசு – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும்.இதேகூட்டணி இந்தத் தேர்தலிலும் தொடரும் என அறிவித்தனர்.கடந்த 13 ஆம் தேதி தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு, என்.ஆர்.காங்கிரசுக்கு 16, பாஜவுக்கு 14 என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அறிவித்தார்.

பாஜகவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுகவுக்கு 2,லாட்டரி அதிபர் மார்டின் மகனின் இலட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீரென முதலமைச்சர் இரங்கசாமி, பாஜகவுடன் கூட்டணியைத் தொடரவேண்டும் என்றால், புதுவைக்கு மாநில அந்தஸ்து மற்றும் லாட்டரி அதிபர் மார்டின் மகனான ஜோஸ் சார்லசின் லஜக கட்சியை புதுவையில் இருந்து அகற்றவேண்டும் என நிபந்தனை வைத்தார்.

இதனால், பேச்சுவார்த்தைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான குழு அதிர்ச்சியாகி, அவசர, அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் புகார் அளித்தது.

டெல்லியில் ஆலோசனை நடத்தி மீண்டும் இரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அமைச்சர் தலைமையிலான குழு நேற்று முன்தினம் வந்தது. ஆனால், அவர்களைச் சந்திக்காமல், திருச்செந்தூர் முருகன் கோயில் சாமி தரிசனம் செய்தார்.இதனால் கோபமான உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரிடம் தொலைபேசியில் பேசி மிரட்டி கூட்டணியை இறுதி செய்தார்.

பின்னர், நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று மதியம் புதுச்சேரிக்குச் சென்றார். பின்னர், கதிர்காமம் முருகன் கோயில் சென்ற முதலமைச்சர் இரங்கசாமி, தனது வேட்புமனுவை வைத்து வணங்கிவிட்டு மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, தனியார் விடுதியில் தங்கியிருந்த ஒன்றிய அமைச்சரும், மேலிடப் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார். இதில் தொகுதி பங்கீடு, லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணிக்குள் இணைப்பதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து, என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள், பாஜகவுக்கு 14 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டது.

Leave a Response