
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட களப்பணிகளை அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன.
இவர்றில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துக் களமிறங்குகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுவிட்டது.
அவற்றின் தொடர்ச்சியாக அந்தக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைச் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
இதற்கான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, முதற்கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை திருத்தணியில் தொடங்குகிறார்.மார்ச் 23 ஆம் தேதி,காலை 10.30 மணிக்கு திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து வாகனப் பரப்புரையை சீமான் ஆரம்பிக்கிறார்.
அன்றைய தினமே சோளிங்கர் மற்றும் இராணிப்பேட்டையிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளிலும்,
மார்ச் 25 ஆம் தேதி கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளிலும்
மார்ச் 26 ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும்,
மார்ச் 27 ஆம் தேதி, சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய தொகுதிகளிலும்,
மார்ச் 28 ஆம் தேதி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி ஆகிய தொகுதிகளிலும் பரப்புரை செய்கிறார்.
வாகனத்திலிருந்தபடியே பரப்புரை, பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என வாய்ப்புள்ள எல்லா வகைகளிலும் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


