
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி, இலண்டன்வாசியான அவரது மனைவி சங்கீதா(48) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு நடிகையின் குறுக்கீடு காரணமாக விவாகரத்து வரை சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.அந்த வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தச் சிக்கல், அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண நிகழ்வில் சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் ஒன்றாகப் பங்கேற்றது சமூகவலைதளங்களில் மீண்டும் பேசுபொருளானது.
இதற்கிடையே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்…
எனது கணவர் நடிகர் விஜய்யை திருமணம் செய்தபிறகு ஆரம்பத்தில் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் வசித்தோம். அதன்பிறகு அடையாறில் உள்ள கஸ்தூரிபா நகரிலும்,நீலாங்கரை கபாலீஸ்வர் நகரில் காஸரினா டிரைவிலும் வசித்து வந்தோம்.26 ஆண்டுகால மணவாழ்க்கையில் ஒரு மனைவியாக அவருக்கு நான் எந்தக்குறையும் வைத்தது இல்லை.
அதேபோல விஜய்யும்,எனக்கோ, எனது 2 குழந்தைகளுக்கோ எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது.இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல நான் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.ஏற்கெனவே தனக்கு எதிராக விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் இருக்க அனுமதிக்கமுடியாது என விஜய் தரப்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதன்படி,தற்போது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளதால் என்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படக் கூடும்.இலண்டன் பிரஜையான எனக்கு சென்னையில் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவாகரத்து பெறும்வரை எனது கணவர் வீட்டில் வசிக்க எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.எனவே நான் தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்வரை நீலாங்கரையில் உள்ள எனது வீட்டில் தொடர்ந்து வசிக்கும் வகையில் என்னை அனுமதிக்க கணவரான விஜய்க்கு உத்தரவிட வேண்டும்.
அல்லது அதற்கு இணையான வசிப்பிடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க விஜய்க்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும். இந்த மனுவையும் பிரதான மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.


