ஓடி ஒளிந்த மோடி வெளிப்படுத்திய இராகுல் காந்தி – நாடாளுமன்றத்தில் அமளி

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி,

பாஜகவைச் சேர்ந்த ஓர் இளம் எம்.பி.(தேஜஸ்வி சூர்யா) காங்கிரசுக் கட்சிக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். எங்கள் தேசபக்தி குறித்தும் கலாச்சாரம் குறித்த எங்கள் புரிதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எங்களைப் பற்றி அவர் கேள்வி எழுப்பியதால் நான் அது தொடர்பான ஒரு விசயத்தில் இருந்து எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன்.

இது முன்னாள் இராணுவத் தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. இதை நீங்கள் நன்றாகக் கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அப்போதுதான், யார் தேசபக்தி உள்ளவர், யார் இல்லாதவர் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். இது,நான்கு சீன டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது நடந்த சம்பவம் பற்றியது. அவை டோக்லாமில் உள்ள ஒரு முகட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தன எனத் தெரிவித்தார்.

அப்போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் புத்தகத்தை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில்,அவர் குறிப்பிடும் புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த இராகுல் காந்தி, எனது ஆதாரம் நம்பகமானது. டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இராணுவத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவணேவின் வெளியிடப்படாத நினைவுக் குறிப்புகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை கட்டுரையில் இடம்பெற்றுள்ளன என தெரிவித்தார்.

வெளியிடப்படாத விசயங்களை அவையில் வாசிக்கக் கூடாது என்று பாஜக அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ‘வெளியிடப்படாத விசயங்களை அவையில் வாசிக்க முடியாது’ எனத் தெரிவித்து, அதை வாசிக்கக் கூடாது என உத்தரவிட்டார். சட்டம் மற்றும் விதிகளின்படி அவை நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தனது கருத்தை முழுமையாக தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பத்திரிகைகள் அல்லது செய்தித்தாள்களில் இருந்து வரும் கட்டுரைகளை அவையில் மேற்கோள் காட்ட முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அவையில் விவாதம் என்பது சட்டங்களின்படி நடத்தப்பட வேண்டும். சபாநாயகரின் தீர்ப்பை மதிக்காத ஒரு உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

இருதரப்பு எம்பிக்களும் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மக்களவையில் தனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,,,,

முன்னாள் இராணுவ தளபதி நரவனே தனது புத்தகத்தில் பிரதமரையும் ராஜ்நாத் சிங் பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார். அதுகுறித்து ஒரு கட்டுரையில் வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையில் இருந்ததைத்தான் மேற்கோள் காட்டுகிறேன்.அவர்கள் பயப்படுகிறார்கள்.ஏனென்றால் அது வெளிவந்தால்,பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உண்மைமுகம் அம்பலமாகிவிடும்.எல்லையில் சீனா நம் கண் எதிரே முன்னேறிக்கொண்டிருந்தபோது,56 அங்குல மார்புக்கு என்ன ஆனது? என்பது தெரிந்துவிடும்.

இந்த விவகாரத்தை பற்றி நான் வெறும் 2, 3 வரிகளைத்தான் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இது தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயம் என்று நான் சொல்கிறேன்.இவை நமது படைகளின் ஒரு முக்கியத் தலைவரான இராணுவத் தளபதியின் வார்த்தைகள்.இது அவர் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர மோடியுடன் நடத்திய உரையாடல்.என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதைத்தான் நான் அவையில் சொல்ல விரும்புகிறேன்.அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை? சீனாவிடம் இந்திய நிலம் இழக்கப்பட்டதா இல்லையா என்பது மற்றொரு விவகாரம்.

ஆனால், கல்வான் மோதலின் போது,பிரமதர் மோடியும்,பாதுகாப்பு அமைச்சரும் என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். நாட்டின் தலைவர் என்பவர் இக்கட்டான தருணத்தில் வழிகாட்ட வேண்டும்.
அவர் முடிவெடுப்பதில் இருந்து ஓடி ஒளிந்து,மற்றவர்களின் தோள்களில் சுமத்தக்கூடாது.அதைத்தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார்.இது இராணுவ தளபதியின் கூற்று.அவரது பார்வை.இராணுவத் தளபதி சொல்வதைக் கண்டு அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதிலிருந்து நாம் ஏதாவது தெரிந்து கொள்வோம் என்றா?. நிச்சயமாக, பிரதமரைப் பற்றி நாம் ஏதாவது தெரிந்து கொள்வோம்.இராணுவத்தைப் பற்றியும், நாட்டின் அரசியல் தலைமை அவர்களையும் எப்படி கைவிட்டது என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.

இவ்வாறு இராகுல் காந்தி கூறினார்.

Leave a Response