
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற ஒரு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார் ஓ,பன்னீர்செல்வன். தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமித்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் தான் தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனு கொடுத்துள்ளார்.
அதில், போடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழ்நாட்டில் இடைக்கால முதலமைச்சராக இருந்துள்ளார். இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அதிமுக சமஉவாக இருந்து கொண்டு, இராமநாதபுரம் தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை எதிர்த்து, சுயேச்சையாக பலாப்பழச் சின்னத்தில் போட்டியிட்டார்.அத்தேர்தலில், அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அதிமுக வேட்பாளரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தவுடன், அரசியலமைப்புச் சட்டம் 10 ஆவது அட்டவணையின்படி, ஓ.பன்னீர்செல்வம் அவரது சமஉ பதவியை இழந்துவிட்டார். ஒரு கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு எதிராகவே சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தால், அவரது பதவி பறி போகும் என அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படுகிறது. அதுவும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சமஉவாக இருந்து கொண்டு, அதிமுக வேட்பாளருக்கு எதிராக இவர் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் சமஉ பதவி முடிந்து போனது.அவர் தொடர்ந்து சமஉவாக இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 150 பக்கம் ஆவணங்கள் சட்டப் பேரவைத்தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஓராண்டு கழித்து இதுபோன்றதொரு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் இப்போது திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் இந்த நிகழ்வு, தமிழ்நாடு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


