அண்ணையின்ர அரசாங்கம் உலகத்திற்கே உதாரணம் – பொட்டு அம்மான் உறுதி

தமிழீழ விடுதலைப் புலிகள் அரசில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் பொட்டு அம்மான்.அவரைப் பற்றி பலரும் அறிந்து கொள்ளாத அரிய செய்திகளுடன் வெளியாகியிருக்கும் நூல்,`அறிவரண் தளபதி பொட்டு அம்மான்`.

அந்நூலில்….

1993 ஆம் ஆண்டு சில தேவைகள் நிமித்தம் ஓமந்தை தடைமுகாம் பகுதியில் நின்றார் தளபதி விநாயகம்.பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கு மக்கள் எழுதும் கடிதங்கள் புலனாய்வுத்துறையின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படும்.அதனால் முத்திரைகள் ஒட்டப்படாத கடிதங்கள் அங்கு சாக்குகளில் குவிந்திருந்தன.

போராளிகள் ஓமந்தை தடை முகாமில் கடிதங்களை உடைத்துப் பரிசோதித்து அனுப்புவதற்குத் தயாராக வைத்தார்கள்.இவற்றை அவதானித்த விநாயகம், யாழ்ப்பாணம் திரும்பிய போது, அம்மான் அங்கு சாக்குகளில் கடிதங்கள் குவிஞ்சு கிடக்குது.கணிசமான கடிதங்கள் முத்திரைகள் ஒட்டப்படாதவை.அதை வெளிநாடுகளுக்கு முத்திரை ஒட்டி அனுப்பிறதெண்டா பெரும் செலவு வரும்.பேசாமல் கொளுத்தி விடுவோம் என்று சொன்னார்.

இப்படிச் சொன்ன விநாயகத்தின் மீது கோபித்த பொட்டு அம்மான்,விநாயகம், பிரபாகரன் ஆட்சியில் சனம் ஏமாத்துப்பட்டார்கள் என்ற பழியைத் தலைவனுக்குக் கொடுக்கக் கூடாது.ஒவ்வொரு சனமும் எங்களை நம்பித்தான் கடிதங்களைத் தடைமுகாமில் கொடுத்திட்டுப் போயிருப்பினம்.அந்தக் கடிதங்கள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றும் முக்கிய கடிதங்களாகவும் அமையும்.

இப்பவே நீங்களே ஓமந்தைக்குப் போய் முத்திரைகள் இல்லாத எல்லாக் கடிதங்களையும் முத்திரை ஒட்டி அனுப்பிட்டு வந்து சந்தியுங்கோ.இதுதான் உங்களுக்கான தண்டனை.

பொட்டு அம்மானின் இந்த உத்தரவையடுத்து,ஓமந்தை சென்ற விநாயகம்,முத்திரைகள் ஒட்டப்படாத கடிதங்களையெல்லாம் முத்திரை ஒட்டி அனுப்பிவிட்டுத் திரும்பி முத்திரைக்கான செகவு விவரத்தைக் கையளித்தபோது, அண்ணையின்ர அரசாங்கம் உலகத்திற்கே உதாரணமாக இருக்க வேணும்.நாங்கள் ஒவ்வொருவரும் மக்களுக்காகவே இந்த விடுதலைப் பயணத்தில் இணைஞ்சிருக்கிறோம்.

தளபதி விநாயகமே பகிர்ந்து கொண்ட இத்தகவல் மூலம் தேச்யத்தலைவரின் ஆட்சியின் பெருமையையும் பொட்டு அம்மான் என்ற வீரரின் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.

– ஜெர்மனியில் வசிக்கும் சாந்தி நேசக்கரம் எழுதியுள்ள, `அறிவரண் தளபதி பொட்டு அம்மான்` என்கிற நூலின் ஒரு பகுதி.

சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் மற்றும் புதுச்சேரி கப்டன் மில்லர் நினைவகம் சார்பாக மே,18,2025 அன்று வெளியிடப்பட்டது.

– அன்பன்

Leave a Response