
2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இணங்காத பட்சத்தில் கட்சியை உடைக்கவும் முயற்சி செய்து வருகிறது.
கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா அழைத்துப் பேசியுள்ளார். இதேபோல, செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்களும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். மேலும், ஒன்றிய பாஜக அரசு,எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகச் செயல்படும் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்தச் சூழலில், திருமங்கலம், கள்ளிக்குடி உட்பட மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில், மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அதிமுக செயலாளர் மிசா செந்தில் என்பவரின் பெயரில் நேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த சுவரொட்டிகளில், அதிமுக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி, நன்றி, நன்றி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா சமஉ ஆகியோரது படங்கள் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் படம் இல்லை.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருக்கும் இவர், எடப்பாடி பழனிச்சாமியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.அவருடைய தொகுதியான திருமங்கலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளர் என செங்கோட்டையனைக் குறிப்பிட்டு ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் அதிமுகவினரிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


