
நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டிற்குப் பேரபாயம் விளையும். அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்றினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 05.03.2025 அன்று சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டினார். அவரது வேண்டுகோளை ஏற்று ஒன்று, இரண்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டன. தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி அவர்களுக்கு உடல்நலம் குன்றியிருப்பதின் காரணமாக அக்கட்சியின் சார்பில் நிறுவனர் பழ.நெடுமாறன், செய்தித் தொடர்புச் செயலாளர் ஆவல் கணேசன் ஆகியோர் பங்கெடுத்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியதாவது…..
சரியான சமயத்தில் இக்கூட்டத்தை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டியிருப்பது வரலாற்று முதன்மை வாய்ந்ததாகும். மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் மாநிலங்கள் அனைத்திற்கும் பெரும் கேட்டினை ஏற்படுத்தும் திட்டமாகும். இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், தென்னாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகிவிடும். அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் இக்கூட்டத்தைக் கூட்டிய முதல்வரை தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்.
1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என ஒன்றிய அரசு வகுத்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் அபாயம் தோன்றியது. எனவே, 1976 ஆம் ஆண்டில் அப்போது தலைமையமைச்சராக இருந்த அன்னை இந்திராகாந்தி அவர்கள், “1976ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2001ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும் என்று ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்”.
2002ஆம் ஆண்டு அப்போதைய தலைமையமைச்சர் வாஜ்பாய் அவர்களும் மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து மேலும் 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டு வரை தொகுதிகள் சீரமைப்பை நிறுத்திவைத்தார்.
எனவே, வருகிற 2026ஆம் ஆண்டு தொகுதிகள் சீரமைப்பு வேலை தொடங்கப்படவுள்ளது. வடமாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் சரிவரக் கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக மக்கள் தொகை மிக அதிகமாகப் பெருகியுள்ள நிலையில் மக்கள் தொகை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு தொகுதிகளைச் சீரமைத்தால் இந்தி பேசும் மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும். அதேவேளையில் தென்மாநிலங்களில் தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இப்பொழுதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆகும். புதிய சீரமைப்பின் திட்டத்தின்படி இது 31ஆகக் குறையும். 8 உறுப்பினர்களை நாம் இழக்க நேரிடும். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதின் விளைவாகத் தமிழ்நாடு உள்படத் தென்மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
ஆனால், வடஇந்தியாவில் கீழ்க்கண்டவாறு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
1. உத்திரப்பிரதேசம் – 80 128 48
2.பீகார் – 40 70 30
3.மத்தியப் பிரதேசம் -29 47 18
4.இராஜஸ்தான் -25 44 19
5.அரியானா -10 14 4
6.இமாச்சலப்பிரதேசம் -4 6 2
7.ஜார்கண்ட் -14 21 7
8.உத்தரகாண்ட் -5 8 3
207 338 131
ஆக மொத்தம் வடக்கேயுள்ள இந்தி பேசும் மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 338 ஆக இருக்கும்.
2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்களைக் கணக்கிட்டால் தென்மாநிலங்களின் எண்ணிக்கை 164 ஆகும். ஆனால், இந்தி பேசும் மாநிலங்களின் எண்ணிக்கை 338 ஆகும். ஆக, எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெற்றால் போதும். இந்தியாவின் ஆட்சி அவர்கள் கையில் நிரந்தரமாக இருக்கும். இந்தித் திணிப்பு தீவிரமாகும். அதுமட்டுமல்ல, இந்துத்துவாவாதிகளின் நீண்டகால இலட்சியமான சமற்கிருதத்தை இந்தியாவின் ஆட்சிமொழியாக்கவேண்டும் என்பதை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். சமற்கிருத திணிப்புக்கு முன்னோடியாகத்தான் இந்தியை ஆட்சிமொழியாக்க முயலுகிறார்கள். மொழி ஆதிக்கம் மட்டுமல்ல, இந்துமத ஆதிக்கமும் நிலைநாட்டப்படும். இந்தியா, இந்து நாடு என அறிவிக்கப்படுவதோடு, சிறுபான்மையினரான இசுலாமியர், கிறித்துவர் போன்றவர்கள் அந்நியர்களாகக் கருதப்பட்டு அவர்களின் உரிமைகள் பறி போகும். இத்தகைய மதவாத அடிப்படை இந்தியாவையே இந்துத்துவாவாதிகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தொகுதிகள் மறுசீரமைப்பினை நாம் ஏற்றுக்கொள்வோமானால், எத்தகைய பேரபாயத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை முற்றிலும் உணர்ந்த நிலையில்தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டியிருக்கிறார். அதற்காக அவரை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
தமிழகமும் இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்நோக்கியுள்ள இந்த பேரபாயத்தைப் போல 1950 களின் தொடக்கத்தில் ஒரு பேரபாயம் உருவாயிற்று. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு மிக்க கேட்டினை விளைவிக்கும் என அப்போதைய தலைமையமைச்சர் சவகர்லால் நேரு கருதினார். எனவே, அவர் ஒரு மாற்றுத் திட்டத்தை வகுத்தார். இந்தியாவை ஐந்து பிரதேசங்களாகப் பிரிக்கும் திட்டமே அதுவாகும். தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசம் என ஒரே மாநிலமாக ஆக்குவது என்றும், அதைத் தொடர்ந்து இப்படியே இந்தியா முழுமையும் ஐந்து பிரதேசங்களை உருவாக்குவது எனவும் அவர் திட்டமிட்டார்.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பெங்களூரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.
தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பிற்று. பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. போன்ற தலைவர்கள் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாட்டு முதல்வராக அப்போதிருந்த காமராசரும் இத்திட்டத்தை விரும்பவில்லை.
நேருவின் அழைப்பை ஏற்று, காமராசர் உள்பட மூன்று மாநில முதலமைச்சர்களும் பெங்களூரில் கூடினர். மற்ற இரு மாநில முதல்வர்களும் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும், புதிதாக அமையும் தட்சிணப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகக் காமராசரை ஏற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளித்தனர். ஆனால், காமராசரோ தட்சிணப் பிரதேசம் அமைக்கப்படுவதை மிகக் கடுமையாக எதிர்த்தார். தனது நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய தோழரான காமராசரே இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததைக் கண்டு நேரு அவர்கள் அதிர்ச்சியடைந்தார். காமராசரை ஒப்புக்கொள்ள வைக்க அவர் செய்த முயற்சி வெற்றிபெறவில்லை. தனது தலைவரான நேருவிடம் “தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இத்திட்டத்தை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்” என அழுத்தந்திருத்தமாகக் கூறினார். எனவே, வேறு வழியின்றி மாபெரும் தலைவரான நேரு தனது திட்டத்தைக் கைவிட நேர்ந்தது.
அன்று மிக உறுதியாக இருந்து தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்து காமராசர் முறியடிக்காமல் போயிருந்தால், மொழிவழி மாநிலங்களே பிற்காலத்தில் உருவாகியிருக்காது.
அதைப்போன்று ஒரு பேரபாயம் தொகுதி சீரமைப்பு என்ற பெயரால் இப்போது உருவாகியிருக்கிறது. பெருந்தலைவர் காமராசரைப் போல நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மிக உறுதியாக நின்று தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தைக் கைவிடுமாறு தலைமையமைச்சர் மோடிக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அந்த நோக்கத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தை வரவேற்றுப் பாராட்டுகிறேன். அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் இத்தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அவர் தெரிவிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபட்டு நின்று முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.


