தில்லியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, குடும்பக் கட்டுப்பாடு விசயத்தில் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்,ஆந்திர மக்கள் அனைவரும் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போதைய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவருடைய இந்தக் கருத்தே பாஜகவினருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கும் நிலையில் நேற்று மீண்டும் ஒரு பேரரதிர்ச்சியை அக்கட்சியினருக்குக் கொடுத்தார் சந்திர்பாபு.
ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இச்சிக்கல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் சந்திரபாபு. அப்போது அவர் கூறியதாவது….
ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். கூகுள் தலைமை செயல் அதிகாரி கூட ஒரு தமிழர்தான். தமிழகத்தில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கின்றனர்.தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டமும் சிறப்பாக உள்ளது.தமிழர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். உயர் பொறுப்புகளிலும், முதல் மற்றும் 2ஆம் இடங்களிலும் தமிழர்களே அதிகம் உள்ளனர். இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தார்கள். தற்போது உலகம் முழுக்கச் சென்றுள்ளார்கள். காரணம் அவர்களின் திறமை. எனவே அறிவு வேறு, மொழி வேறு இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வலியுறுத்தும் தாய்மொழிக்கல்விக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பதும் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை காரணமாக தமிழர்கள் உலகம் முழுதும் கோலோச்சுகிறார்கள் என்று அவர் பேசியிருப்பதும் ஒன்றிய அரசுக்கு முழுக்க முழுக்க எதிரானது.இதனால் தான் ஒன்றிய பாஜக அரசினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை ஆகியனவற்றைப் பாராட்டிப் பேசியது மட்டுமின்றி,மும்மொழிக் கொள்கை பற்றி மேலும் பேசும்போது, ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 3 மொழிகள் என்ன 5 முதல் 10 மொழிகளைக் கற்க ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றார்.
இதன் மூலம் மும்மொழிக் கொள்கையைக் கிண்டல் செய்துள்ளார்,இது ஒன்றியஅரசுக்கு அவர் விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.