எடப்பாடிக்குக் குழிபறிக்கும் வேலை நடக்கிறது – இராஜேந்திரபாலாஜி பேச்சு

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகரில் அதிமுக நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற கட்சி நிர்வாகியை, மேடையிலேயே இராஜேந்திர பாலாஜி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, இராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல செயல்படுவதாக பாண்டியராஜன் சென்னையில் விமர்சித்ததாக தகவல் வெளியானது.

இதையறிந்து கோபமடைந்த இராஜேந்திர பாலாஜி நேற்று நடந்த கூட்டத்தில் பண்டியராஜனை ஒருமையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது…

உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் நான் கட்சிப் பணியாற்றி வருகிறேன். நான் நேதாஜி, பிரபாகரன் வரலாற்றைப் படித்து வளர்ந்தவன். எனக்குப் பயமே கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியைப் பின்பற்றி பழனிச்சாமி தலைமையில் வழிநடப்பவன். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இதே கட்சியில் இருப்பவன்நான்.

இலண்டனில் படித்த சிலர் (மாஃபா பாண்டியராஜன்) என்னை குறுநில மன்னன் என்கிறார்கள். குறுநில மன்னன்தான் நான். என்னுடன் இருப்பவர்கள் வாளேந்தி வருவர். எங்களை அழிக்க, ஒடுக்க நினைப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் பேடிகள் அல்ல. தைரியமாக எதிர்த்து நிற்போம். திமுகதான் எங்கள் எதிரி என பழனிச்சாமி கூறியுள்ளார். நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் அடித்துத் தள்ளி விடுவேன். கட்சியில் மரியாதை இல்லை என்று கூறும் நீ, இந்தக் கட்சிக்கு என்ன செய்தாய் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்.கட்சியைக் காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது.

நான் இதுவரை ஒரே கட்சியில்தான் உள்ளேன். நீ முதலில் காங்கிரஸ், அடுத்து தமாகா, பாஜக, தேமுதிக, அதிமுக, ஓபிஎஸ் அணி, தற்போது மீண்டும் அதிமுக. வெட்கமாக இல்லையா உனக்கு. ஒரு வழக்கு போட்டாலே, நீ அடுத்த கட்சிக்கு மாறி விடுவாய். நீ ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. என்னைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும்.! சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன்? வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து இபிஎஸ்சுக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன்; உன்னால் முடியுமா? மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்குச் சென்றுவிட்டு வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response