உலகத்துக்குப் பொதுவான அமைப்பு ஐநா என்று சொல்லப்பட்டாலும் அது அனைவருக்கும் பொதுவாக நடந்துகொள்வதில்லை என்றும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் கொடுமையில் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாமல் சிங்கள்ர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இதைக் கண்டித்து ஈழத்தமிழர் முருகதாசன், ஐநா அலுவலகம் முன் தீக்குளித்து இறந்தார். அவருடைய நைனைவு நாளில் ஐநா அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது மே 1 7 இயக்கம். அதையொட்டி அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு….

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கேட்ட போது, அது இலங்கை அரசின் உள்நாட்டு நீதி பொறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்ட பின்னர் தான் செய்ய முடியும் என்று பதில் கூறியுள்ளார்.
இனஅழிப்புப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இலங்கையின் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் பெட்டியை கட்டிக் கொண்டு ஓடிய ஐ.நா,
உணவுக்கும், மருந்துக்கும் பதிலாக கிரிக்கெட் மட்டைகளை வைத்து அனுப்பிய ஐ.நா,
இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டபோது,களத்திலிருந்து கிடைத்த எண்ணிக்கையினை வைத்திருந்த போதும், செத்த பிணங்களை எண்ணுவது எங்கள் வேலையல்ல என்று கூறிய ஐ.நா,
இனஅழிப்பு நடப்பதை தடுக்கக் கோரி தமிழர்கள் கதறிய போது, தமிழர்கள் சாவதைக் காட்டிலும் இலங்கையின் இறையாண்மையையே முக்கியமாகப் பேசிய ஐ.நா,
இன்று இனப்படுகொலைக்கு விசாரணை கேட்கின்ற போது மீண்டும் இலங்கையின் இறையாண்மை பேசி தமிழீழ வீதிகளில் வலம் வருகிறது.
ஐ.நா வின் பேச்சை நம்பி சரணடைந்த அப்பாவி தமிழர்கள் இன்று இலங்கையின் சித்ரவதைக் கூடங்களில்.
இலங்கையின் இறையாண்மையை காப்பதற்காக தனது விதிகள் அனைத்தையும் மீறி தமிழர்களைக் கொன்றொழிக்க துணைபுரிந்தனர் ஐ.நா அதிகாரிகள்.
போர் முடிந்ததாக சொல்லப்பட்ட பின்பும் இன்றுவரை கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும், கடத்தல்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்று ஆறு வயது சிறுவன் தர்சன் படுகொலை வரை இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இலங்கையின் செயல்பாடுகள் முன்னேறியிருப்பதாகவும் , திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகவும் அப்பட்டமான பொய்யினை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றனர் இனஅழிப்பு அரசின் கூட்டாளிகளான ஐ.நா அதிகாரிகள்.
ஒரு இனஅழிப்பு செய்த அரசையே தனக்கான தீர்மானத்தினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரச் செய்த கேவலத்தை என்னவென்று சொல்வது?
இத்தகைய ஐ.நா வின் அயோக்கிய முகத்தினை கிழித்தெறிந்து அம்பலப்படுத்தினாலாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி கிடைக்காதா என்றுதான் ஐ.நா முன்றலின் முன் தீக்குளித்து உயிர்விட்டார் முருகதாசன். இலங்கையின் இறையாண்மையை காக்கும் வேலையை செய்யும் ஐ.நாவினை பின்வருமாறு கடுமையாக சாடினார் முருகதாசன்.
//இறையாண்மை என்ற பேரில் நடக்கும் இந்த இன அழிப்பை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். தமிழினத்தின் மீது இன அழிப்பைச் செய்வது ஸ்ரீலங்கா அரசு என்றவுடன் நீங்கள் இறையாண்மை பற்றித் தொடங்குகின்றீர்கள். இறையாண்மை கொண்ட அரசின் உறவைப் பேணுவதற்காக அல்லது பாதுகாப்பதற்காக நீங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாகவே நாங்கள் எல்லோரும் கருதுகின்றோம். ஒரு இனத்தை நசுக்க அல்லது இனத்தை அழிக்க நீங்கள் எல்லோருமே ஆதரவளிக்கின்றீர்கள். தமிழர் உரிமைக்காக போராட்டம் செய்தால் வன்முறை அல்லது பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லுகிறீர்கள். தமிழரை 1958ல் இருந்து ஒரு அரசு அழித்துக் கொண்டிருப்பதை வன்முறையாக நீங்கள் பார்க்கவில்லையா? தமிழினம் இந்த ‘பூமியில் வாழும் இனமில்லையா? அவர்கள் உரிமைகளுடன் வாழ உரித்துடையவர்கள் இல்லையா? நீங்கள் ஏன் எம்மை மட்டும் நசுக்க ஒத்துழைக்கின்றீர்கள்? //
உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று ஐ.நா வின் முகத்திரையை கிழித்து, ஜெனீவாவின் ஐ.நா அலுவலகத்தின் வாயிலிலேயே மரணத்தை ஏந்திக் கொண்டவர் முருகதாசன். ஐநாவின் அயோக்கியத்தனங்களை தோலுரிக்கும் முருகதாசனின் மரண சாசனத்தின் வரிகள்.
//ஐ.நா நிறுவனமே
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சிங்கள அரசு எமது தமிழ்மக்களுக்கு செய்துவந்த கொடுமைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அந்த நீண்ட துன்பியல் வரலாற்றின் நிகழ்காலப் பரிணாமாகவே, தமிழ் மக்களின் பிரச்சனையில் உலக நாடுகளின் தலையீடு ஏற்பட்டது. உலக நாடுகள் தலையிட்டபோது தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் நம்பினார்கள். ஏன் நானும்கூட நம்பினேன். ஆனால் நிகழ்காலத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றோம்.
சிங்கள அரசின் கபட நாடகத்திற்கு உலக நாடுகளும் துணைபோவதைக் கண்டதனாலேயே இந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது தமிழ்மக்கள் தங்களது தாய்நாட்டில் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டும் உலகம் பாராமுகத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் சிறிலங்கா அரசை ஊக்குவித்து வருவது கண்டும் மனம்வெதும்பியே உலகப் பொதுமன்றமாம் ஐ.நா முன்றலில் தீயின் சாட்சியாக என்னை அர்ப்பணிக்க முடிவெடுத்தேன்.
எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின்முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.
ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீதி கிடைக்கச் செய்வதில் ஐ.நா.வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாக இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்.
சிங்கள அரசின் இன அழிப்பிற்குத் துணைப்போகும் ஐ.நாவே இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்த முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் கோபம்கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும். //
எத்தனை இலட்சம் தமிழர் இறந்தாலும் இலங்கையின் இறையாண்மையும் அதன் மூலம் வல்லரசுகளுக்கு கிடைக்கும் இலாபமுமே முக்கியம் என தொடர்ந்து கொண்டிருக்கும் ஐ.நா வின் வாயில்களை உலுக்கிக் கேள்வி கேட்போம். நாம் பலவீனமான சமூகமாக இருக்கும்வரை நமக்கான நீதியைப் பெற முடியாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளை நெஞ்சில் ஏந்துவோம். நாம் கெஞ்சிக் கூப்பாடு போட்டால் நமக்கு எவனோ ஒருவன் வந்து நீதியை வழங்கி விடுவான் எனும் மடமையினை விரட்டுவோம். Blue helmet ன் தொப்பியைப் பிடித்து உலுக்காமல், காலைப் பிடித்துக் கொண்டிருந்தால் நம்மை மிதித்து விட்டு உதறிச் செல்லும் இந்த ஐ.நா. அதன் காலரைப் பிடித்துச் சொல்வோம் நடந்தது இனப்படுகொலையென்று. ஏற்காதவரை மீண்டும் மீண்டும் வருவோம் என்று சொல்வோம். இனப்படுகொலைக்கான விசாரணையைத் தொடங்கும் வரை, பொதுவாக்கெடுப்பினை நடத்தும் வரை இந்த ஐ.நாவினை உலுக்கிக் கொண்டே இருப்போம். வீதிகளை போராட்டங்களால் நிரப்பிக் கோண்டே இருப்போம். அதுவே முருகதாசன் எனும் தோழனுக்கு நாம் செய்யும் மரியாதை.
முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ல் சென்னையில் ஐ.நா அலுவலகம் முற்றுகையை மே பதினேழு இயக்கம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்.
காலை 10 மணி, UNICEF அலுவலகம், அடையாறு, மத்திய கைலாசம் அருகில்.


