இலண்டன் மாநகரில் களைகட்டிய பொங்கல்விழாவில் சுபவீரபாண்டியன்

இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.

உழவுத் தொழிலையும், இயற்கையையும் போற்றும் தமிழரின் தனி அடையாளமான உழவர் திருநாள் விழாவினை ஒவ்வொரு ஆண்டும் இலண்டனில் கொண்டாடி வருகின்றனர். தமிழர் முன்னேற்றக் கழகமும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் துவங்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஆண்டு பொங்கல் விழா மிகக்  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா நாதசுர மங்கள இசையோடு குத்து விளக்கும் ஏற்றப்பட்டு தொடங்கப்பட்டது. தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி மறைந்த தொண்டறச் செம்மல்களுக்கு செம்மாந்த வீரவணக்கம் செலுத்தப்பட்டது. விழாவினை தலைவர் திரு.நாகதேவன் தொகுத்து வழங்கினார்.

தலைமை விருந்தினராக தமிழ்ப் பேராசிரியரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளருமான திரு.சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார். மேலும் இலண்டன் நியூஹாம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்டீபன் டிம்ஸ்( Mr. Stephen Timms ) மற்றும் இலண்டனை சார்ந்த பல அமைப்புகளின் பொறுப்பாளர்களும் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டனர்.

துணைத் தலைவர் அல்லி குமார் மற்றும்  செயலாளர் இர. அன்பழகன் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினர். திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவமணி மனோகரன் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றை விளக்கி உரை ஆற்றினார்.

தமிழரின் வரலாற்றையும் தமிழ் மொழிச் சிறப்பையும்  தமிழ் மொழி பேசுவதை பெருமையாக கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும்  இரத்தினச் சுருக்கமாக விளக்கும் காணொளி விழாவில் திரையிடப்பட்டது .

தலைவர் திரு.நாகதேவன் தமிழரின் பண்பாடு மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றுக்காக த.மு.க கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் தொண்டினை விளக்கி தலைமை உரையாற்றினார் . மேலும் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு மலரினை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மலரினை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் சுபவீ ‘திருக்குறளும் அறிவியலும்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார்.

 பொங்கல் விழா ஆடல், பாடல், கவிதை, சொற்பொழிவு மற்றும் நாடகம் ஆகிய முத்தமிழும் கலந்த கலை நிகழ்ச்சிகளோடு களைகட்டியது.

கலை நிகழ்ச்சிகளை திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் உறுதுணையோடு மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.

 

Leave a Response