புலி – திரைப்பட விமர்சனம்

மன்னர்கள் காலத்தில் நடக்கும் கதை.  வேதாளக் கோட்டையில் வேதாளங்கள் என்ற  ஆட்சி செய்து வருகிறார்கள். (வேதாளம் என்றால் கடைவாய்ப்பற்கள் சற்றே நீண்டிருக்கும். அவ்வளவுதான்) மகாராணி ஸ்ரீதேவிதான் ராணி என்றாலும், அவர் தளபதி சுதீப்பின் கைப்பாவையாக செயல்பட்டு நாட்டு மக்களின் நல்வாழ்வில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

அவர்களின் ஆளுமைக்கு உள்பட்ட 56 கிராமங்களில், ஒரு கிராமத்துப் பெரியமனிதர் பிரபு அந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்கப்போய் தன் கையை இழக்கிறார். நதியில் மிதந்து வரும் ஒரு குழந்தையை எடுத்து அவர் வளர்க்க, அந்தக் குழந்தை வளர்ந்து விஜய் ஆகிறது.

இதற்கிடையில் சுதீப்பின் கொடுங்கோன்மைக்கு அவ்வப்போது விஜய்யின் கிராமம் இலக்காக, ஒவ்வொரு முறையும் விஜய், அங்கு வரும் வேதாளங்களின் காலைப்பிடித்து மக்களைக் காக்கிறார்.

ஒருகட்டத்தில், விஜய் காதலிக்கும் ஸ்ருதிஹாசனை வேதாளங்கள், தங்கள் கோட்டைக்குத் தூக்கிப் போக, ஸ்ருதியை விஜய் மீட்கக் கிளம்புகிறார். போகிற வழி மற்றும் போன இடத்தில் நடப்பவைதான்  கதை.

மன்னர் கால விஜய்யைப் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.  குதிரைச் சவாரி, வாளைச் சுழற்றி வீசும் லாவகம் என்று ஒரு சரித்திர வீரராக விஜய்யை ஒத்துக் கொள்ளலாம்.

ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா ஆகிய இரண்டு நாயகிகள். பாடல்களுக்கு ஆடுவது தவிர இருவருக்கும் பெரிதாக வேலையில்லை.

நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழ்த்திரையில் ஸ்ரீதேவி.  அப்படியே இருக்கிறார். பறந்து பறந்து சண்டை போடுகிறார்.

சுதீப் கம்பீர வில்லன். தம்பி ராமய்யா, சத்யன் ,நந்திதா ஸ்வேதா, பிரபு, நரேன், ஜோ மல்லூரி, விஜயகுமார், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள்.

நட்ராஜின் ஒளிப்பதிவு , கலைஇயக்குநர் முத்துராஜ்  கைவண்ணம் படம் முழுவதும்  இருக்கிறது.

மோசமான ஆட்சி நடத்தும் ராணியைத் திருத்தி, கடைசியில் விஜய் அந்நாட்டின் மன்னராவது போல முடித்திருக்கிறார்கள். விஜய்யின் விருப்பம் புரிகிறது.

குழந்தைகளுக்கான படம், குழந்தைத்தனமான படம்.

Leave a Response