விவசாயிகளை பழிவாங்குவதற்காக, காய்கறிகளுக்கு தடை விதிக்கும் கேரளா, அண்டை மாநிலமா அல்லது அண்டை நாடா என்ற சந்தேகம் எழுகிறது’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதாக, பொய்யான குற்றச்சாட்டை கேரளா கூறுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து வேளாண் பல்லைக்கழகமும், உணவு பாதுகாப்பு கழகமும் பல ஆய்வுகளை செய்து, ‘உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், எந்த நச்சுத்தன்மையும் தமிழக காய்கறிகளில் இல்லை’ என, திட்டவட்டமாக கூறியுள்ளன.
இந்நிலையில், நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப்படாத வகையில், ‘ஆய்வு செய்யப்பட்ட சான்றுடன் வரும், காய்கறி வாகனங்களை மட்டுமே, இனிமேல் கேரளாவிற்கு அனுமதிப்போம்’ என தெரிவிப்பது, இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல். இதனால், கேரளா, அண்டை மாநிலமா அல்லது அண்டை நாடா என்கிற சந்தேகம் எழுகிறது. தமிழக விவசாயிகளை காக்க வேண்டிய அரசு, இப்பிரச்னையில் மெத்தனமாக இருக்கிறது.
இதுகுறித்து ஆலோசிக்க கேரள அரசு, மாநில சுகாதார செயலர்கள் கூட்டத்தை கூட்டியது. தமிழக அரசு கலந்து கொள்ளாததால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலலிதா இப்பிரச்னையில், உடனடியாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறிஉள்ளார்.


