
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடந்த முழுஅடைப்பையொட்டி சாலைமறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்ட பின்பு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசையும், மத்திய அரசுக்கு அடிபணிந்து கபட நாடகம் நடத்தி வரும் ‘குதிரை பேர’ அதிமுக அரசையும் கண்டித்து இன்று (05-04-2018) சென்னை வாலாஜா சாலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன்.
காவல்துறையினரின் தடையையும், தடுப்பையும் மீறி பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள உழவர் உழைப்பாளர் சிலை அருகில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டோம்.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டம் வெற்றிப் போராட்டமாக, அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் நடைபெற்றிருக்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் தோழர்கள், வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லா அமைப்புகளுக்கும், அனைத்துக் கட்சிகளின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


