அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்- திமுக எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் , குறிப்பாக காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.

மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாம் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Response