பேருந்துக்கட்டண உயர்வும் இலந்தைப்பழப் பாட்டியின் பெருந்தன்மையும் – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

மலையளவு உயத்திய பேருந்துக்கட்டணத்தைக் கடுகளவு குறைத்தவுடன் ஊடகங்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டன.

ஆனால் பேருந்துக்கட்டண உயர்வு சாமானிய மக்களை எவ்வளவு கடுமையாகப் பாதித்திருக்கிறது என்பதையும்,
அதன்பின்னும் மங்காமல் இருக்கும் தமிழ்ச்சமூகத்தின் பேராண்மையையும் ஒருங்கே விளக்குகிறது மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திவ்யாவின் பதிவு. அப்பதிவில்…

நேரம் மதியம் 12:45 இருக்கும்.

வெளியே “இலந்த பழம் இலந்த பழம்” என்று கூவும் சத்தம் கேட்டது. நானும் என் தங்கையும்
வெளியே வந்து,

இலந்தப் பழ பாட்டி இங்க வாங்க, பழம் எவ்ளோ என்ற எங்கள் குரலைக் கேட்டு சற்றுத் தொலைவில் நடந்து சென்றிருந்த பாட்டி திரும்பி வந்தார்.

மதிய வெயில் சுள்ளுனு அடிக்கிறது.நான் கண்களைச் சுருக்கிப் பார்க்கிறேன், பாட்டியோ பளீச்சென்று பார்த்து கால் படி பத்து ரூபா தாயி என்றார்.

நல்ல கரு மரப்பட்டை நிறத்து சுங்குடிச் சேலையை கொசுவம் வச்சு இழுத்துக் கட்டி, சுருங்கிய தோலுடன் காட்சியளித்த பாட்டி, தலையில் கூடையும், இடுப்பில் தன் வெத்தலை பாக்கு சுருக்குப் பையைச் சொருகினார். பெட்டியை இறக்கி வைக்க கை குடுக்கவா பாட்டி என்று கொஞ்சம் சத்தமாகக் கேட்டேன்.

வாயில் இருந்த வெத்தலையை ஒரு பக்கமாக ஒதுக்கிக்கொண்டு, வாய் கொள்ளாத சிரிப்புடன் வேணாம் டா தாயி என்றார். கூடையை இறக்கி விட்டு அங்கே படியில் அமர நானும் கூடை அருகே அமர்ந்தேன்.

ஒரு இலந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டு, எந்தூரு பழம் பாட்டி, எங்கிருந்து வாரீக என்று வினவினேன்.

ஆலம்பட்டி டா தாயி என்றார். பஸ்ஸு காசு கூட்டீட்டானுவளே, எதாச்சு ஒரு மரத்தடி நெழலா பாத்து வித்துர வேண்டிய தானே பாட்டி, எதுக்கு சிரமப் படுறீக.

யாரு தாயி வாங்குவா, இந்த கூடைக்கும் சேத்து வேற பஸ்ஸுல டிக்கட் கேக்குறானுவ. அப்டி வந்து இப்டி நாலு தெரு அலஞ்சா தான் தாயி வியாபாரம் ஆகுது.

சரி பாட்டி அரைப் படி போடுங்க ன்னு கேட்டு, ரெண்டு கால் படியா நல்லா கோபுரம் மாதிரி குவியக்குவிய அள்ளிப் போட்டபின் கையளவு பழத்த கையில குடுத்து சாப்ட சொன்னுச்சு பாட்டி.

கூடைய தூக்கி தலைல வச்சுட்டு, நான் குடுத்த இருபது ரூபாயை வாங்கி சுருக்குப் பையில போட்டுட்டு வரேன் தாயி ன்னு சிரிச்சுகிட்டே இலந்த பழம் இலந்த பழம் ன்னு கிளம்பிட்டாங்க.

பஸ் டிக்கட் விலை கூடிடுச்சுன்னு பழம் விலையைக் கூட்டவும் இல்லை, ஏன் யாரால இந்த நிலமைன்னு அவுங்க யோசிச்சும் பாக்கல. திடீர் பேருந்து கட்டண உயர்வு நம்மை பாதித்திருக்குமா என்று தெரியவில்லை.

அதைப் பற்றி மீம்ஸ்கள், ஜோக்குகள் மற்றும் மாநில அரசாங்கத்தை வசை பாடிவிட்டு அதை லேசாகக் கடந்து விட்டோம். அவ்வளவே!

ஆனால் உண்மையாகவே பெரும் பாதிப்பிற்கு உள்ளானது மா, புளி, இலந்த பழம், நெல்லிக்கனி வியாபாரம் துவங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமே.

பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்து வாழ்வாதாரம் தேடும் இந்த அடித்தட்டு மக்கள் மட்டுமே பெரிதும் பாதிப்படைந்துள்ளனரே அன்றி வேறு யாரும் பெரிதும் நஷ்டப் படவில்லை என்பதே உண்மை.

இலந்தைப் பழ நிலமை தான் நம் விவசாயிகளுக்கும். நேற்று ஆண்டாள் இன்றைக்கு விஜேந்திரர், பத்மாவதி என்று நாம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்.

அதனால் அன்றாடம் அவதிப்படுகிறார்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும்.

மக்களுக்குச் சோறு போடுறத தவிர அவர்கள் வேறு என்ன பாவம் செஞ்சாங்க?

பேருந்துக்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவுடன் அதை மக்கள் மேல் திணிக்கும் பெருமுதலாளிகள் மத்தியில், அதைப் பொருட்படுத்தாமல், கடைசியா கையளவு அள்ளி போட்ட அந்தப் பாட்டியின் மனசுதான் நம் தமிழ்ச்சமூகத்தின் பெருமை.

Leave a Response