அரும்புமீசை குறும்புப் பார்வை, வெண்ணிலா வீடு ஆகிய இரண்டு படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம், இப்போது எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் படம் விசிறி.
விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பி;ப்ரவரி 2,2018 அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், விஜய்சேதுபதியின் ஒருநல்லநாள்பாத்துசொல்றேன் படத்தால் விசிறி படம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் வெற்றிமகாலிங்கம்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
எங்கள் படத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியிடுகிறோம் என்று ஓரிரு மாதங்களுக்கு முன்பே அறிவித்து விளம்பரங்களும் செய்துவந்தோம்.
அப்போது விஜய்சேதுபதி படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை, திடீரென பிப்ரவரி 2 வெளியீடு என்று அவர்கள் சொன்னார்கள். உடனே திரையரங்குக்காரர்கள் அந்தப்படத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.
வடபழனி பகுதியில் அப்படம் எழுபது காட்சிகள் திரையிடப்படுகின்றன. விசிறி படத்துக்கு ஒரு காட்சி கூட இல்லை.
சின்ன படங்களைக் காப்பாற்றுவோம் என்று பல பெரியமனிதர்கள் பேசுகிறார்கள். எல்லாம் பொய். சின்ன படங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. பெரிய படங்கள் வெளிவருகிற இடைவெளிகளை நிரப்புவதற்காக சின்னபடங்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் இவற்றிற்கு ஆதரவாக இருப்பது போல் நடிக்கிறார்கள்.
என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.