கெட்டவர்களைச் சுட்டுக்கொல்வதில் தவறேதுமில்லை என்று நம்புகிற காவல்துறை அதிகாரிக்கு, நல்லவர், கெட்டவர் என்று யாரையும் கறாராகப் பிரித்துவிட முடியாது என்று சில கதைகள் மூலம் ஒரு தாதா புரியவைக்கிற கதைதான் விக்ரம்வேதா.
காவலதிகாரி விக்ரமாக மாதவன், மிடுக்குடன் திரிந்து துஷ்டர்களைச் சுட்டுக்கொல்லும் அவருக்கு அலைபாயுதே,ஆயுதஎழுத்து படங்களில் அமைந்தது போல நாயகியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் உண்டு.அப்படியான காட்சிகளில் அன்று போலவே இன்றும் இருக்கிறார் மாதவன்.
வேதா எனும் தாதா வேடத்தில் விஜய்சேதுபதி. அவருடைய அறிமுகக்காட்சியில் திரையரங்குகளில் விசில் பறப்பது உறுதி. அப்படி ஒரு காட்சி. இந்துபோல் அவருக்கு இனிமேல் அமையுமா? என்பது கேள்விக்குறி. அந்தக்காட்சி மட்டுமின்றி அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
விக்ரம்சார் விக்ரம்சார் என்று தொடங்கி அவர் பேசும் வசனங்கள் எல்லாம் படத்துக்கு வசனம் வாழ்க்கைக்குப் பாடம்.
ஷ்ரதாஸ்ரீநாத், வரலட்சுமி என இரண்டு நாயகிகள் படத்தில் இருந்தும் நல்ல காதல் காட்சிகள் இல்லை.
நாயகன் நாயகி ஆகிய இருவரில் ஒருவரேனும் கொஞ்சம் அப்பாவியாக இருந்தால் காதல் இருக்கும். இந்தப்பட நாயகிகள் மிகுந்த புத்திசாலிகள்.
கதிர் உட்பட படத்தில் வருகிற கதாபாத்திரங்கள் பொருத்தமாக இருக்கின்றன.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். வடசென்னையை வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார்.
சாம் இசையில் பாடல்கள் படத்தோடு ஒட்டியிருக்கின்றன. டசக்கு டசக்கு தவிர. பின்னணி இசையில் படத்தின் தரம் உயர்ந்திருக்கிறது.
வசனங்கள் மணிகண்டன். நல்லவன் செத்தாலும் கெட்டவன் செத்தாலும் எமோஷன் ஒண்ணுதானே என்பது உட்பட கவனிக்கத்தக்க கைதட்ட வைக்கும் வசனங்கள் நிறைய.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் புகைப்பழக்கம் கெடுதல் என்கிற இடத்தில் ஆங்கிலத்தில் மாதவனையும் தமிழில் விஜயசேதுபதியையும் பேசவைப்பதில் தொடங்கி, பாத்திரப்படைப்புகள், திரைக்கதை உத்திகள் என அனைத்திலும் புத்திசாலித்தனமாக இயங்கியிருக்கும் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோரை அவர்களுடைய முந்தைய படங்களை மறந்துவிட்டுப் பாராட்டலாம்.