
கொம்பன் படத்தின் வெற்றி விழா ஏப்ரல் 7 ஆம் றாள் சென்னையில் நடந்தது. அவ்விழாவில் நாயகன் கார்த்தி, நாயகி இலட்சுமிமேனன், கோவைசரளா, வேல.ராமமூர்த்தி, கருணாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்,
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டுடியோகிரின் நிறுவனத்தின் விநியோகமேலாளர் சக்திவேல் பேசும்போது, இங்கு பெரும்பாலான பத்துவிழுக்காடு நகர மக்களைக் கருத்தில் கொண்டே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. மீதி தொண்ணூறுவிழுக்காடு மக்களுக்கான திரைப்படமாக உருவான படம்தான் கொம்பன். இப்போது திரையரங்குக்காரர்கள் தொலைபேசி செய்து மக்கள் கூட்டம் கூட்டமாகப் படத்துக்கு வருகிறார்கள் என்று சொல்வதிலிருந்து இதுபோன்ற படங்கள்தாம் அவர்களுக்கான படங்கள் என்பதை உணரமுடிகிறது என்றார்.
கார்த்தி பேசும்போது, இந்தப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. கிராமமக்களின் எதார்த்த வாழ்க்கையைப்படமாக்கியிருக்கிறோம். இதில் வன்முறை இருக்கிறதென்றால் அந்த மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது அதுதான் இந்தப்படத்திலும் இருக்கிறது என்றார்.
நாயகி இலட்சுமிமேனன், நான் நடித்த படங்களிலேயே எனக்கு அதிக வரவேற்பைக் கொடுத்த படம் இதுதான் என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியபோது, கடந்த முப்பதுநாட்களாக நாங்கள் தீராத மனஉளைச்சலில் இருந்தோம். இந்தப்படத்துக்குச் சிக்கல்கள் தொடங்கி ஒருவாரத்திற்குப் பிறகுதான் இவை திட்டமிட்டு நடக்கின்றன என்று புரிந்தது. ஒரு படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு சோதனைகள் எனும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.கொம்பன்’படத்துக்கு பிரச்சினை வந்த போது நான் 3 பேரிடம் போனேன் . தெய்வத்திடம் போய் முறையிட்டேன்.என் அப்பாவிடம் போய் அழுதேன். யாருமற்ற நிலையில் மூன்றாவதாக பத்திரிகை, ஊடகங்கள் உங்களிடம்தான் வந்தேன். சென்சார் செய்யப் பட்ட படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினை என்ற போது உங்களிடம் வந்தேன். ஆதரவு தந்தீர்கள்.
இது வரை இல்லாத அளவுக்கு இவ்வளவு விரைவில் திரையுலகினர் ஒன்று சேர்ந்து ‘கொம்பன்’படத்துக்கு ஆதரவு அளித்தார்கள். திரையுலகினர் இதை என் தனிப்பட்ட ஒருவனின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் யாரும் இப்படி பாதிக்கப்படக் கூடாது. என்பதில் உறுதியாக போராட வேண்டியதை உணர்ந்திருக்கிறார்கள். இப்போது கொம்பனுக்குச் சிக்கல் முடிந்துவிட்டது. எனக்குத் தொடங்கிவிட்டது. அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள் உனக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பார்கள் எப்படி சமாளிக்கப்போகிறாய்? என்று பலரும் என்னிடம் சொல்கிறார்கள். எனக்குச் சிக்கல் வந்தால் நான் ஊடகங்களிடம்தான் வருவேன் என்று பேசினார். அடுத்து கேள்வி பதிலின் போது, மருத்துவர்கிருஷ்ணசாமி ஓர் அம்பு என்றும், நேரில் வேண்டுகோள் விடுப்பதும் மறைமுகமாக வன்முறையில் ஈடுபடவும் செய்தனர் என்றும் சொன்னார்.
இன்றைக்குத் திரைத்துறை நலிந்திருக்கும் சூழலில் ஞானவேல்ராஜா போன்ற ஒரு பெரியதயாரிப்பாளரே இப்படி வேதனைப்படவேண்டியிருப்பதற்கு என்ன காரணம்? மருத்துவர்கிருஷ்ணசாமி அம்பு என்றால் அவரை எய்தவர் யார்? என்பனவற்றைக் கண்டறிந்து களையவேண்டிய பெரும்பணி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. ஞானவேல்ராஜாவுக்குத் திட்டமிட்டு தொல்லை கொடுத்தது யார்? என்பதையும் ஆய்ந்தறிந்து சரிசெய்யவேண்டும்.
