
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதே நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 16-2017) 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தொடங்கியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு பெரிய வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணி அமைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களோடு சூரி, சிம்ரன், நெப்போலியன், லால் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, இமான் இசை, யுகபாரதி பாடல்கள் என தொழில்நுட்பக்கலைஞர்களின் கூட்டணியும் மூன்றாவது முறையாகத் தொடருகிறது. இது சிவகார்த்திகேயனின் 12 ஆவது படமாகும்.


