உலகில் எங்கு சென்றாலும் தமிழன் வெல்வான் – மும்பையில் சமுத்திரக்கனி பெருமிதம்

மும்பை மாநகராட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் தாராவி பகுதியில் தமிழ்ப்பெண் மாரியம்மாள் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவர் சிவசேனா கட்சியின் தாராவி வட்டத்தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கத்தின் மனைவி ஆவார். மேலும் மாரியம்மாள் மாநகராட்சி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்கமிட்டி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். மும்பை மாநகராட்சி கமிட்டியில் தமிழ்ப் பெண்ணுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.

இந்தநிலையில் மும்பை தமிழர் சபா, தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் மும்பை தமிழ் அமைப்புகள் சார்பில் மாரியம்மாளுக்கு பிரமாண்ட பாராட்டு விழா கிங்சர்க்கிள் பகுதியில் உள்ள சண்முகானந்தா அரங்கில் ஏப்ரல் 2 அன்று நடந்தது.

பாராட்டு விழாவிற்கு என்.இ.எஸ். மற்றும் சரஸ்வதி கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.வரதராஜன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதல்– மந்திரி மனோகர் ஜோஷி, சஞ்சய்ராவுத் எம்.பி., ராகுல் செவாலே எம்.பி., மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், நிலைக்குழு தலைவர் ரமேஷ் கோர்காவ்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் சந்துர், கவுன்சிலர்கள் ஜெகதீஷ், வசந்த் நகாசே, மங்கேஷ் சாத்தம்கர், தீப்மாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து நடிகர் அருண்பாண்டியன், இயக்குநர் சமுத்திரகனி, விஜய் டி.வி. கலக்கப்போவது யாரு புகழ் பழனி, அறந்தாங்கி நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் மராத்திய தமிழ்ச்சங்கம், தருண் பாரத் சேவா சங்கம், இந்திய பேனா நண்பர் பேரவை, திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், அந்தேரி தமிழ்ச்சங்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படிப்பகம், தமிழர் நலக்கூட்டமைப்பு, மராட்டிய மாநில டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், மகராஷ்டிரா சைக்கிள் பேரிவாலா சங்கம், பம்பாய் தென்னிந்திய ஆதி திராவிட மகாஜன சங்கம், மராத்திய மாநில கார்த்திக் நற்பணி மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் மாரியம்மாள், முத்துராமலிங்கத்தை பாராட்டினர்.

மராத்திய மாநில தேவர் முன்னேற்ற பேரவை சார்பில் மாரியம்மாளுக்கு வெள்ளி வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.

மறக்க மாட்டேன்
பாராட்டு விழா குறித்து பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் பேசியதாவது:–

எனது மனைவியை வெற்றி பெறச்செய்ய எல்லா சமய, சாதி மக்களும், அமைப்பினரும் கடுமையாக உழைத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினராக எனது மனைவியை நினைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டனர். எனது மனைவியை வெற்றிச்பெற செய்த அனைத்து தமிழ் மக்களையும் என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து என்.இ.எஸ். கல்வி குழும மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் டி.வி. புகழ் பழனி, நிஷா ஆகியோரின் நகைச்சுவை பேச்சை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

இதையடுத்து மாரியம்மாள், முத்துராமலிங்கத்தை பாராட்டி தலைவர்கள் பேசியதாவது:–

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி:– கவுன்சிலரான மாரியம்மாள் மும்பை மேயராக வர உழைக்க வேண்டும். முத்துராமலிங்கம் சாதாரண தொண்டனாக இருக்கும்போதே அவரது பணியைப் பார்த்து நான் வியந்து இருக்கிறேன். எனவே தான் அவருக்கு தொடர்ந்து கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பல பதவிகளைப் பெற வாழ்த்துகிறேன்.

சஞ்சய்ராவுத் எம்.பி.:– கடந்த 30 ஆண்டுகால முத்துராமலிங்கத்தின் உழைப்பே இந்த வெற்றிக்கான காரணம். பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் பேசும்போது, எங்கள் தாராவி எப்படி உள்ளது என்று தான் எங்களிடம் கேட்பார்கள். தமிழர்களுக்கும், மராட்டியர்களுக்கும் இடையே பழங்காலத்தில் இருந்தே நல்ல உறவு உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அநீதி நடந்தபோது அதைக் கண்டித்து குரல் கொடுத்தவர் பால் தாக்கரே. தமிழர்களுக்கு சிவசேனா எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

ராகுல் செவாலே எம்.பி.:– மும்பையில் தமிழ்நாடு பவன் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே நான் உறுதி அளித்து இருந்தேன். அதை நிறைவேற்றும் வகையில் எனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மும்பையில் தமிழ்நாடு பவன் கட்டிக்கொடுப்பேன்.

மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர்:– மும்பை மாநகராட்சியால் தமிழர்களுக்கு என்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுப்பேன்.

இதைத்தொடர்ந்து திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி பேசியதாவது:–

இதுபோன்ற மேடை எனக்கு புதிது. கடல் கடந்து சாதித்தவன் தான் தமிழன். உலகில் எங்கு சென்றாலும் தமிழன் வெல்வான். வெற்றிக்காக நாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அநீதியைக் கண்டு பொங்குகிற ஒவ்வொருவனும் எனது நண்பன் என சேகுவாரா கூறினார். அதுபோல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் அனைவரும் எனது நண்பர்கள். சாதி, சமயங்களைக் கடந்து தமிழராய் நாம் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ‘சாதி, சமயங்களை கடந்து மனித நேயத்தை காப்போம். மும்பையில் ஒரு தமிழர் கவுன்சிலரானது பாராட்டுக்குரிய வி‌ஷயம். சமுதாயத்திற்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே திரும்ப பெறுவோம்’ என்றார்.

விழாவில் ஏற்புரை ஆற்றிய மாரியம்மாள் பேசுகையில், ‘‘எனது வெற்றிக்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. பாராட்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்திய வரதராஜன் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் நன்றி. சாதி, சமயங்களை கடந்து மக்களுக்காக உழைப்பேன் என உறுதி மொழி ஏற்கிறேன்’’ என்று கூறினார்.

முடிவில் மராத்திய மாநில தேவர் முன்னேற்றப்பேரவை பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

விழாவில் பி.எஸ். பட்டத்தேவர், அசோக்குமார், பி.பி.முத்து, மா.கருண், ராஜேந்திர சாமி, அங்கப்பன், அண்ணாமலை, எம்.எஸ்.காசிலிங்கம், ஹரிராம்சேட், ரெம்ஜிஸ். ஏ.பி.சுரேஷ், பூமிநாதன், லெட்சுமணன் யாதவ், அப்பாத்துரை, வெ.குமார், சுப்பையா தேவர், எம்.எஸ்.பாண்டியன், பதிதேவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Response