பித்தலாட்டக்காரன் போக்கிரி எல்லாம் புனிதன் மாதிரி பேசுகிறான் – சகாயம் வேதனை

சென்னை தியாகராயநகரில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் சகாயம் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

மக்கள் பாதை இயக்கத்தின் மூலம் மாற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உதவ கலப்பை என்ற திட்டமும், நெசவாளர்களுக்கு உதவும் வகையில் தறி திட்டமும், கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்க திண்ணை திட்டமும் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்காக திடல் திட்டமும், குறைந்த விலையில் மருந்துகளை விற்க மக்கள் மருந்தக திட்டம், பாரம்பரிய கலைகளுக்கான கூத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக ஊன்றுகோல் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்ச் சமுதாயத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இலட்சியவாதிகளுக்கு வெற்றி தோல்வி இல்லை. எனவே இந்த இயக்கத்தின் மூலம் பல இலட்சியவாதிகளை கொண்டு வருகிறோம்.

பேசி, பேசி அழிந்த சமூகம் இந்தச் சமூகம். நான் தற்போது மவுனம் காத்து வருகின்றேன். அயோக்கியத்தனம் செய்பவன், பித்தலாட்டக்காரன், போக்கிரி எல்லாம் புனிதன் மாதிரி பேசுகின்றனர். நான் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், இருக்குமிடத்தில் லஞ்சத்தை ஒழிக்கின்றேன்.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது, என்னை தேர்தல் பார்வையாளராக நியமித்திருந்தனர். என்னுடன் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தனர். அதில் எனக்கு மட்டும் ஹிந்தி தெரியாது. அவர்கள் என்னிடம் “ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா” என்று கேட்டனர். எனக்கு ஹிந்தி தெரியாததை ஒருபோதும் தகுதி குறைவாக நினைத்ததில்லை. காரணம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் பலர் உயிர் இழந்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நான் ஹிந்தியை தவிர்த்து விட்டேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஹிந்தியை ஆதரித்தபோதும், தமிழகம் ஒன்று மட்டும் தான் எதிர்த்தது. தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்தார்கள். இப்போது நல்லவர்களை போல் நடிப்பவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். மெரினா மாணவர் போராட்டம் எழுச்சி பெற்றது. அப்போராட்டம் நாட்டுக்கான போராட்டம் இல்லை. தமிழ் நாட்டுக்கான போராட்டம். காளைக்கான போராட்டம் இல்லை. நாளைக்கான போராட்டம். தற்போதைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி அழிகிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும். எனவே இளைஞர்கள் பேசுவதை தவிர்த்து விட்டு அதிகம் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response