ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் ஐஏஎஸ் ஆனார்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் தேர்வு முடிவுகள், இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, சின்னக்கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த, ஆடு மேய்க்கும் தொழிலாளி பச்சையப்பன், குமாரி தம்பதியின் மகன் யுவராஜ், 22, என்பவர், 751வது, ‘ரேங்க்’ பெற்று தேர்ச்சி பெற்றார்.

இந்த கிராமத்துக்கு இதுவரை பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 418 மதிப்பெண்கள் பெற்று, பிளஸ்- 1 மற்றும் பிளஸ்- 2, மங்கலம் அரசு பள்ளியில் படித்தார். பின், திருவண்ணாமலை, எஸ்.கே.பி., பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ., படித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார். தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து யுவராஜ் கூறியதாவது:

சகாயம், இறையன்பு போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை முன்னுதாரணமாக நினைத்து படித்தேன். முதலில், சென்னையில் உள்ள மனித நேய மையத்தில், இரண்டு மாதம் படித்தேன்.

அரசு சார்பில் வழங்கிய, மடிக்கணினியை வைத்து, இணையதள வசதியுடன் படித்து, தேர்ச்சி பெற்றேன்.மாநிலத்தில், முதலிடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன். பணியில் சேர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார நடவடிக்கை எடுப்பதில், கவனம் செலுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response