தமிழகத்தில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவதில்லை- ஜி.கே.நாகராஜ் பேச்சு


கோயம்புத்தூர்,திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் மாபெரும் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் 8.1.15 அன்று நடைபெற்றது. அதில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தமிழக அரசைக் குறைகூறினார். அவர் பேசியதிலிருந்து….

1990-ம் ஆண்டு நான் குஜாரத்தில் தொழில் துவங்கியபொழுது நிறுவனத்தைப் பதிவுசெய்ய விற்பனைவரி சான்றிதழ்பெற குஜாரத் விற்பனைவரித்துறையை அணுகியபொழுது ஒரே வாரத்தில் விற்பனைவரிச்சான்றிதழ் கிடைத்தது.
1990-ம் ஆண்டு கோவையில் தொழில்துவங்க வணிகவரித்துறையை அணுகியபொழுது ஒருமாத காலமும், வீட்டுப்பத்திரநகலையும், நிறுவனத்தின் பத்திரநகலையும்,சொத்து மதிப்பையும்,ரூ.5,000 செலவு ஆனது.பத்து தடவைக்குமேல் வணிகவரித்துறை அலுவலகத்துக்கு சென்றபோதுதான் விற்பனைச்சான்றிதழ் பெறமுடிந்தது.
தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை.மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவதில்லை. கடினப்பட்டு கடனை வாங்கி தொழில் தொடங்கினாலும் அதற்கேற்ற வசதியை அரசு செய்து கொடுப்பதில்லை.
தமிழகத்தில் இயற்கைவளம் சுரண்டப்பட்டு அதன்மூலம் நாட்டை ஆள்வோர் வருமானம் பார்த்தனர்.இன்று மனிதவளத்தை சுரண்டி மதுவின் மூலமாக வருமானத்தைப் பெற்று தமிழகத்தின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தின் தொழிற்துறையைப் புரிந்துகொண்ட அமைச்சர்கள் தமிழகத்தில் இல்லை.தொழிற்துறையைப் பற்றியோ,விவசாயத்தைப் பற்றியோ கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் கவலைப்படவில்லை.
தமிழகத்தில் பஞ்சு உற்பத்தி இல்லை.தடையில்லாத மின்சாரம் இல்லை.தமிழகத்தில் வேலை செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.இருப்பினும் தொழில்முனைவோர்(ஜவுளித்துறை) தங்கள் சொந்த முயற்சியினால் தொழிலை சிறப்பாக நடத்தி வந்தார்கள்.ஆனால் நிலைமை இன்று கைமீறி போய்விட்டது.
தொடர்ந்து அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு மற்றும் திட்டமிடுதல் இல்லாமல் தமிழகத்தின் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்,இயந்திரங்கள் வெளிமாநிலங்களின் உற்பத்தி விலையோடு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும்,எத்தனை உண்ணாவிரதங்கள் நடத்தினாலும் அரசு உதவிசெய்ய தயாராக இல்லை.ஏனெனில் இவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு இலவசங்களை கொடுத்தும்,மதுவை கொடுத்தும் வாக்குவங்கியைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
தொழிற்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் வாக்குவங்கியைப்பற்றி அவர்கள் கவலைப்படாததால் அவர்கள் செய்யும் போராட்டத்தைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.
அரசியல் வேண்டாமென்று ஒதுங்கிக்கொள்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது.ஒவ்வொருவரும் ஓட்டுவங்கியை தமிழகத்தின் நலனுக்காக,நல்லாட்சி அமைய,மாற்றியமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.அப்படியானால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்.
உங்கள் போராட்டம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு போராட்டத்தில் பேசினார்.

Leave a Response