மின்சாரக் கொட்டு, கலைஞர்களின் பிழைப்பைக் கெடுத்து விட்டது- எஸ்.ரா வேதனை

எஸ்.இராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு விழா, 4.1.2015 மாலை 6 மணிக்கு, புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது.  அவ்விழாவைப் பற்றிய எழுத்தாளர் அருணகிரியின் நெகிழ்வான பதிவு….

ஜனவரி 2 ஆம் நாள், எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து ஒரு மின் அஞ்சல் வந்து இருந்தது. என்னுடைய ‘சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு விழா, 4.1.2015 மாலை 6 மணிக்கு, புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெறுகிறது. தாங்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்’ என்று அழைத்து இருந்தார்.

புக் பாய்ண்ட் அரங்கம், அண்ணா சாலையில் ஸ்பென்சர் வணிக வளாகத்திற்கு எதிரே, காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் உள்ள ஒரு சிறிய அரங்கம். இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்ற இடம். 6.15 மணிக்கு உள்ளே சென்றேன். பார்வையாளர்கள் வரிசையில் எஸ்.இராமகிருஷ்ணன், அருணன், மனுஷ்ய புத்திரன், ஜென்ராம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். எஸ்.ரா அவர்களிடம் சென்று கை கொடுத்து என் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டேன். ‘நீங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சி’ என்றார்.

சரியாக 6.30 மணிக்கு விழா தொடங்கியது. கவிஞர் ரவி சுப்பிரமணியம் அவர்கள், சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றை இசையுடன் பாடினார். முதல் பாடல்: நாடா கொன்றோ? காடா கொன்றோ? என்ற ஔவையார் இயற்றிய நான்கு வரிப் பாடல். இந்தப் பாடலை ஒருவர் இசை அமைத்துப் பாடுவதை இப்போதுதான் கேட்டேன்.

இது மார்கழி மாதம். சென்னை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் இசைவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் உயர் வகுப்பினரது கைகளில் உள்ள இசை விழா அரங்குகளில் தமிழ்ப்பாடல்களைப் பாடுவதற்கோ, தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. கடந்த ஆண்டு பாடிய பாடல்களையே இந்த ஆண்டும் பாடுகிறார்கள். எந்த ஒரு மாற்றமும் கிடையாது.

ரவி சுப்பிரமணியம் அவர்களுடைய முயற்சியை அனைத்துத் தமிழ் இசைக் கலைஞர்களும் கிராமியக் கலைஞர்களும் தொடர்ந்தால் தமிழக இசை மேடைகளில் மேலும் ஒரு புதுமையாக அமையும். தேமதுரத் தமிழோசை ஒலிக்கும்.

அடுத்து நூல் வெளியீடு. முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் வெளியிட, ஜென்ராம் பெற்றுக் கொண்டார். முனைவர் சுப்பிரமணியன், சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளார் என்று அறிவித்தார்கள். அவர் எழுதிக் கொண்டு வந்து இருந்த உரையை வாசித்தார். அடுத்து மார்க்சிய சிந்தனையாளர்-எழுத்தாளர் அருணன் அவர்கள் அரை மணி நேரம் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். அருமையான கருத்துகளைக் கூறினார்கள்.

கடந்த நூற்றாண்டுகளில் தமிழில் எழுதப்பட்டு இருக்கின்ற நூல்கள் அனைத்தும் புராணங்கள்தாம்; ராஜ தரங்கிணி மட்டுமே வரலாறைப் பதிவு செய்த நூல். கோவில்களில் குவிந்து கிடந்த பொன்னையும், பொருளையும் கொள்ளையிடும் நோக்கத்துடன் படையெடுத்து வந்த முஸ்லிம்கள்தாம், இந்தியர்களுக்கு வரலாறு எழுதும் முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். மொகலாய மன்னர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். பாபர் எழுதிய பாபர் நாமா நமக்குப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. இது போன்ற நூல்களின் வழியாகத்தான் நாம் பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்கிறோம்.

தெக்கரை சாமிநாத பிள்ளைதான் தமிழகத்தில் முதல் தனிக்கச்சேரி நடத்திய நாதஸ்வரக் கலைஞர் என்ற தகவலை இராமகிருஷ்ணன் ‘சஞ்சாரம்’ நாவலில் பதிவு செய்து உள்ளார். ஆம்; அதுவரையிலும் அவர்கள், தாசிகளின் ஆடலுக்கு ஏற்ப இசைக்கின்ற பக்க வாத்தியக்காரர்களாவே செயல்பட்டு வந்தனர். அதனால் ஒரு கட்டத்தில் வெறுப்பு அடைந்த சாமிநாத பிள்ளை, ‘நாதஸ்வரக் கலைக்குத் தனிச் சிறப்பு உண்டு. எங்களால் தனித்து இயங்க முடியும்; மக்களை ஈர்க்க முடியும்’ என்ற உறுதியோடு, தனித்தே வாசிக்கத் தொடங்கினார். மக்கள் கேட்டார்கள். படிப்படியாக அவரது புகழ் வளர்ந்தது. இதைக் கண்ட தாசிகள், ஐயா, நீங்கள் தனியாக வாசித்தாலும், எங்களுடைய நிகழ்ச்சிகளுக்கும் வந்து வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒப்புக் கொண்டார்.

இப்படித்தான் தமிழகத்தில் நாதஸ்வரக் கலை என்பது ஒரு தனிக்கலை ஆயிற்று என்று எஸ்.ரா எழுதி உள்ளார். இது ஒரு நுணுக்கமான தகவல்.

வட இந்தியர்களின் ஷெனாய் வாத்தியக் கருவியைப் பயின்று வாசிக்கின்ற தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், வட இந்தியர்கள் எவரேனும் நாதஸ்வரத்தை வாசிப்பது இல்லையே. ஏன்? என்று கேட்டார். உடனே நான், ‘அது அவர்களால் முடியாது’ என்று குரல் எழுப்பிச் சொன்னேன்.

இன்றைக்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கக் கூடிய நாதஸ்வரக் கலைஞர்களும் இருக்கின்றார்கள். ஆனால், அந்த அளவிற்குப் புகழ் பெறவில்லை என்றார்.

அதற்குப் பல காரணங்கள். இன்றைக்கு ஊடகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. நொடிக்கு நொடி புதிய செய்திகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றார்கள். எனவே, எந்த ஒரு கலைஞரும் நீடித்த புகழைப் பெற முடியாது.

2000 ஆம் ஆண்டில், வைகோ அவர்களுடைய மகள் கண்ணகியின் திருமணத்தில், திருவிழா ஜெய்சங்கர் நாதஸ்வரம் வாசித்தார். அவர் திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். அவருடன் தவில் வாசிக்கின்ற வலையபட்டி சுப்பிரமணியம் அவர்களை, சென்னை இராயப்பேட்டை ஸ்வாகத் ஓட்டலில் சந்தித்து முன்பதிவு செய்தேன். 25,000 ரூபாய் கேட்டார். எனக்குப் பலத்த அதிர்ச்சி. அப்போது அது பெரிய தொகை. இருந்தாலும், இருவருமே பெயர் பெற்ற கலைஞர்கள். அவர்களது பெயரைப் போட்டாலே அது ஒரு சிறப்பு. எனவே, அந்தத் தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

சஞ்சாரம் நாவலை, கரிசல் காட்டு எழுத்தாளர் கி. இராஜநாராயணன் அவர்களுக்குப் படையல் செய்து இருக்கின்றார் எஸ்.ரா.

இதன்பிறகு, எஸ்.இராமகிருஷ்ணன், ஜென்ராம், மனுஷ்ய புத்திரன் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்த்தினர். நூல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இராமகிருஷ்ணன் விளக்கங்கள் அளித்தார்.

இந்த நாவல் வெளியீட்டு விழாவைப் பெரிய அரங்கத்தில் நடத்தலாம். பெரிய மனிதர்களை அழைத்து வந்து பேச வைக்கலாம். ஆயிரக்கணக்கில் வருவார்கள். ஆனால், இந்த விழாவுக்கு என் இதயத்தோடு ஆத்மார்த்தமாக உரையாடக் கூடிய நண்பர்களை மட்டுமே அழைத்து இருக்கின்றேன். பத்துப் பேர் வந்தாலும் போதும் என்றுதான் கருதினேன் என்றார்.

அந்த வட்டத்திற்குள் நானும் இருக்கின்றேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எஸ். இராமகிருஷ்ணன் ஏற்புரையில் இருந்து சில பகுதிகள்….

என்னுடைய நாவல்களை ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டே போவேன். கடைசியில் ஏதாவது ஒரு தலைப்பைத் தெரிவு செய்து கொள்வேன். யாமம், நெடுங்குருதி எல்லாமே அப்படித்தான். ஆனால், இந்த நாவலுக்கு ‘சஞ்சாரம்’ என்ற தலைப்பை முதலில் தெரிவு செய்து விட்டுத்தான் எழுதத் தொடங்கினேன்.

கிராமத்தில் என் வீடு இருக்கின்ற தெருவின் மறுகோடியில் கோவில் இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு நாளும் நாதÞவர இசையோடுதான் எங்கள் பொழுதுகள் விடிந்தன. சில நாள்கள் அந்த இசை ஒலிக்கவில்லை என்றால், கோவிலுக்குச் சென்று அவர்கள் ஏன் வரவில்லை என்பதைக் கேட்டு அறிந்து கொள்வேன்.

தஞ்சை மண்டலத்தில் கோவில் நிரம்ப உள்ளன. அங்கே கலைஞர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால், எங்கள் கரிசல் மண்ணில் அத்தகைய ஆதரவு கலைஞர்களுக்குக் கிடையாது. அங்கே அவர்களை ஆதரித்தவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர்கள் அல்ல. தன் வீட்டில் பத்து படி அரிசி இருந்தால், அதில் இரண்டு படி அரிசியைக் கலைஞர்களுக்கு அள்ளித் தருகின்ற ஏழை சம்சாரிகள்தான் (விவசாயிகள்)கலைஞர்களை ஆதரித்தார்கள். காரணம், விவசாயிகள் நாதஸ்வரத்தைத் தங்கள் மண்ணுக்கு ஏற்ற இசையாகக் கருதுகிறார்கள். கரிசல் மண்ணின் ஆன்மாவைத் தொட்டு எழுப்புவது நாதஸ் வரம்.

நான் ஒரு பயணி. இந்தியா முழுமையும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்து இருக்கின்றேன். எத்தனையோ பேருந்து நிலையங்களில் படுத்து உறங்கி இருக்கின்றேன். இளமைப் பருவத்தில் தமிழகத்திற்குள் அப்படிப் பல இரவுகள் பேருந்து நிலையங்களில் தங்கியபோது, எனக்குத் துணையாக இருந்தது இசைக் கலைஞர்கள் மட்டுமே. ஒரு தாய் தன் குழந்தையைக் கூட மடியில் இருந்து இறக்கி வைத்து விடுவாள். ஆனால், தவில் கலைஞர்கள், தவிலைத் தம் மடியிலேயே வைத்துக்கொண்டு தூணில் சாய்ந்து உறங்குவார்கள்.

‘அதைச் சற்று இறக்கி வைக்கக் கூடாதா?’ என்று கேட்டால், ‘வாசிக்கின்ற வாத்தியம் அல்லவா? அதைத் தரையில் வைக்கக்கூடாது’ என்பார்கள். அந்த அளவிற்கு அவர்கள் வாத்தியக் கருவிகளைத் தங்கள் உயிராகக் கருதுகிறார்கள்.

சிறந்த இசைக்கலைஞர்களின் மறுபக்கத்தில் அவர்களது வாழ்க்கை அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கின்றது.

எங்கள் குடும்பம் சுயமரியாதை இயக்கக் குடும்பம். எங்கள் வீட்டின் பெயர் பெரியார் இல்லாம். ஆனால், என்னுடைய இளமைப் பருவத்தில் இடதுசாரித் தோழர்கள் பலரது நட்பு எனக்கு வாய்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அவர்கள்தாம், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, முழு இரவு இசை என்ற புதிய வழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். கிராமியக் கலைஞர்களை மேடை ஏற்றினார்கள். தமிழகம் முழுமையும் அந்த நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றன. அதன் வழியாகத்தான் கே.ஏ.குணசேகரன், கொல்லங்குடி கருப்பாயி போன்ற கிராமியக் கலைஞர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தார்கள். அவர்கள் மட்டும் அல்ல எத்தனையோ பேர் புது வாழ்வு பெற்றார்கள்; புகழ் வெளிச்சம் கிடைத்தது. ஆனால் இன்றைக்கு, ஊடகங்களின் பெருக்கத்தால் அத்தகைய முழு இரவு இசை நிகழ்வுகள் அருகி விட்டன.

இப்போது தமிழகத்தின் 20,30 ஆயிரம் கோவில்களில் மின்சாரத்தில் இயங்குகின்ற மணி, கொட்டு ஆகியவற்றைப் பொருத்தி விட்டார்கள். நாதஸ்வர இசையைக் கலைஞர்கள் வாசிப்பதற்குப் பதிலாக, பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிபரப்புகின்றார்கள். இன்றைக்கும் ஒரு நாதஸ்வரக் கலைஞருக்குக் கோவிலில் வழங்குகின்ற மாத ஊதியம் 1200 ரூபாய்தான். ஆனாலும் அவர்கள் கோவில்களில் வாசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். இப்போது அதுவும் மின்மயமாகி விட்டதால், அந்த வாய்ப்புகளும் பறிபோகின்றன.

அந்த மின்சாரக் கொட்டு, கலைஞர்களைப் பார்த்துச் சிரிப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்போதும் ஒரே இசையைத்தான் தருகிறது; ஆனால், எத்தனையோ ராகங்களில் இசைக்கின்ற கலைஞர்களின் பிழைப்பைக் கெடுத்து விட்டது.

இப்போது நாதஸ்வரக் கலைஞர்கள் அருகி வருகிறார்கள். அவர்களது அடுத்த தலைமுறையினர் அந்தக் கலையைக் கற்பதே இல்லை. எனக்குத்தெரிந்த ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞரின் இரண்டு குழந்தைகளும், வீட்டில் நாதஸ்வரம் வாசிக்காதே என்று அவரைத் தடுக்கின்றன. அதனால் அவர் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு வாசிக்கின்றார். அதை யார் கேட்டாலும் சரி; கேட்காவிட்டாலும் சரி. அவர் தன் கடமையைச் செய்து கொண்டே இருக்கின்றார்.

நாதஸ்வர இசை அழிந்து விடக் கூடாது. அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய பொழுது செவிக்கு நல்ல விருந்தோடு நிறைவு பெற்றது. வெளியில் வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன். பால் நிலவின் ஒளி, வான மண்டலம் முழுமையும் மெலிதாகப் படர்ந்து இருந்தது. பார்த்து ரசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். நாட்காட்டியைப் பார்த்தேன். இன்றுதான் முழுநிலவு!

Leave a Response