முதன்முறை அதிமுகவுக்கு ஒரு தமிழ்ப்பெண் தலைமையேற்கிறார் – அரசியல் பார்வையாளர்கள் கருத்து

செயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று ( டிசம்பர் 29-2016 ) சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வி.கே.சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக, முதலமைச்சர் அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, சின்னம்மாவுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்போம். சின்னம்மா வி.கே.சசிகலாவிடம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அதிமுக வரலாற்றில் மிக மிக முக்கியத்தும் வாய்ந்த இந்த நேரத்தில், தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு இடம் தராமல் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கட்டுக்கோப்போடும், அதிமுக இதுவரை நமக்கு அளித்திருக்கும் அனைத்துப் பெருமைகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தலைமைக்கு விசுவாசத்தோடும் பணியாற்றிட இந்தப்பொதுக்குழு உறுதி அளிக்கிறது. எம்ஜிஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். அம்மாவை, சின்னம்மா வடிவில் கண்டு கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்று சூளுரைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தை போயஸ் தோட்டத்திலுள்ள சசிகலாவிடம் கொடுத்தனர். அவரும் தீர்மான முடிவின்படி பொதுச்செயலளார் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார். சனவரி 2-2017 அன்று அவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (சுருக்கமாக அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது.

எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க வில் அவரே பொதுச்செயலராக இருந்தார்.தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அதன்பின் அதிமுக செயலலிதா வசம் வந்தது.

1972 முதல் 1987 வரை அதிமுகவின் பொதுச்செயலாராக இருந்த எம்ஜிஆரின் தாய்மொழி மலையாளம், அதன்பின் இருந்த செயலலிதாவின் தாய்மொழி கன்னடம். இப்போது தலைமையேற்கவிருக்கும் சசிகலாவின் தாய்மொழி தமிழ். இதுவரை தமிழர்களுக்குப் பிறமொழியினர் தலைமையேற்றிருந்த நிலை மாறி ஒரு தமிழ்ப்பெண்மணியே தலைமையேற்பது மகிழ்ச்சிக்குரியது என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

Leave a Response