பொய்வழக்குப் போட கஞ்சா தேவையில்லை, பழைய 500 ரூபாய் போதும் – மோடியை விளாசும் பொதுசனம்

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் நவம்பர் மாதம் 8–ந் தேதி திடீரென பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

இந்நிலையில் 2017 மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும்.

இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 28 அன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கிக் கிளையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் போது தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அல்லது அவர்கள் டெபாசிட் செய்யும் பணத்தைப் போன்று 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை ஒருவர் வைத்துக் கொள்ளலாம்.

* மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

* அப்படி யாராவது வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது வைத்து இருக்கும் தொகையைப் போல் 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இச்சட்டம் மக்கள் மத்தியில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிவருகிறது.

செல்லாத தாளை வைத்திருப்பது எப்படிக் குற்றமாகும் என்று பலரும் கேட்கிறார்கள்.

அதோடு, பொய் கேசு போட இனி கஞ்சா தேவையில்லை. பழைய 500 ரூபாய் தாள்கள் போதும்.
மார்ச் 31 க்கு பிறகு போலிஸ் மற்றும் ஆட்சியர்களுக்கு பிடிக்காதவர்களை கைது செய்வது எளிது. இப்பொழுது போல கஞ்சா மற்றும் போதை பொருட்களை அவர்கள் வீடுகளில் ஒழித்து வைத்து கைது செய்ய வேண்டியதில்லை. மோடியால் செல்லாமால் ஆக்கப்பட்ட பழைய 500 ரூபாய் 11 தாள்களை சட்டைப் பைக்குள் வைத்து விட்டு பொய் கேசு போடலாம். நான்காண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கலாம்

என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response