சோறு தண்ணீரின்றி செத்து மடிவதைத் தவிர வேறுவழியில்லை – மோடிக்குச் சாட்டையடி கொடுக்கும் கவிஞர்

ஜெயலலிதா மறைவின் காரணமாக சற்று மறைந்திருந்த பணச்சிக்கல் மீண்டும் பெரிதாகிறது. உழைத்துச் சம்பாதித்த பணம் வங்கியில் நிறைந்திருக்க அன்றாடச் செலவுகளுக்குக் கூட அல்லாடும் வெகுமக்கள் மனநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் கவிஞர் சுகிர்தராணி,என் திட்டத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மோடி அண்ணாவுக்கு ஒரு தங்கையின் கடிதம் என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில்,

திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம். இந்திய நாட்டின் குடிமகள் நான்.தயவுசெய்து உங்கள் பத்து இலட்ச ரூபாய் கோட்டைக் கழற்றி வைத்துவிட்டு சாதாரண ஓர் ஆளாய் மாறுவேடம் தரித்து ஒரு நகரத்திற்கோ ஒரு கிராமத்திற்கோ வந்து பார்க்கவும். ஊரும் சேரியுமாய் இருக்கக்கூடிய என் கிராமத்திற்குக்கூட வரலாம்.

பால்காரர்,காய்கறி,மளிகை,நாளிதழ்க்காரர், மாத தவணைக்காரர், சீட்டுக்காரர் என எல்லாரிடமும் சம்பளம் வந்ததும் தருகிறேன் என்று கடன் சொல்லி சம்பளம் வந்தும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. அவர்களிடமிருந்து ஒளிந்துகொண்டு திரிகிறேன்.

சம்பளப்பணம் எடுக்க முடியவில்லை.எங்கேயும் ஏடிஎம் திறக்கப்படவில்லை. திறந்திருந்தாலும் பணமில்லை. பணமிருந்தாலும் வரிசையில் நிற்கும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.அப்படியே இரண்டாயிரம் ரூபாய்த்தாள் கிடைத்தாளும் அதை வெளியே மாற்ற முடியவில்லை. மாற்றினாலும் ஒரு கடனை அடைக்கத்தான் அத்தொகை போதுமானதாக இருக்கிறது. என்ன செய்வது கையாலாகாத நாங்கள்?

கடந்த சனியன்று பணமெடுக்க வங்கிக்குச் சென்றிருந்தேன். ஒரு நாளைக்கு இருநூறு பேருக்கு மட்டுமே டோக்கன் தருவதால் காலை ஏழு மணிக்கே சென்றும் என்னுடைய டோக்கன் எண் 163. சரி, வங்கியில் 24,000 ரூபாய் எடுக்கலாம் என்றால் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமாம்.அது இங்கிருந்து 20 கி மீ தூரம்.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட பழமொழி நினைவுக்கு வந்து தொலைத்தது.சரி இங்கேயே இருப்போம் என வரிசையில் நின்றிருந்தேன்.உடன்நின்ற வயதானவர்கள், கைக்குழந்தையுடன் நிற்போர்,இளைஞர்கள்,பெண்கள்என அத்தனைபேர் கண்களிலும் தூக்கமின்மை,எரிச்சல்,கோபம்,இயலாமை,வெறுப்பு,விரக்தி,கையறுநிலை,அச்சம் இன்னும் தொல்காப்பியர் சொல்லாத எத்தனையோ மெய்ப்பாடுகள்.

காமிரா கண்களை மட்டும் பார்க்கும் நீங்கள், எங்கள் கண்களையும் ஏறெடுத்துப் பாருங்கள்.அன்று பன்னிரண்டு மணி நான் இரண்டாயிரம் ரூபாய் எடுக்கும்போது. அன்று காலை நான் குளிக்கவேயில்லை.நின்றிருந்த அனைவரும் அப்படித்தான். வியர்வையிலும் புழுக்கத்திலும் குளித்தோம்.அந்த வாசனை எங்களுக்கு அருவெருப்பாகவே இல்லை. விரக்தியில் குறுநகை புரிந்த எங்களுக்கு நறுமணமாகவே இருந்தது.

இந்த வாழ்க்கையை எங்களோடு வாழ்ந்து பாருங்களேன்.புது அனுபவமாக இருக்கும் உங்களுக்கு. நான் எடுத்த இரண்டாயிரம் செலவாகி விட்டது. இன்று விடுப்பு எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போகலாம் என்றிருந்தேன்.ஆனால் வங்கிகளுக்கு இன்று விடுமுறையாம். ஏற்கெனவே இரண்டாயிரம் எடுப்பதற்கு இரண்டுநாள் ஊதியமில்லா விடுப்பு எடுத்தும் ஏடிஎம்மில்பணமில்லாமல் திரும்பி வந்தவகையில் ஊதிய இழப்பு ரூ 3200.

தெரிந்தவர் தெரியாதவர் எல்லாரிடமும் ஐம்பது நூறென கைமாத்து வாங்கியாகிவிட்டது. காப்பீட்டு முகவரைப் பார்த்தவுடன் ஒளிவதைப்போல என்னைப் பார்த்தவுடன் அவர்கள் ஒளிகிறார்கள்.என்னைப் பார்த்து சிலர் ஒளிவதும், பலரைப் பார்த்து நான் ஒளிவதுமாக வாழ்க்கை, கண்ணாம்மூச்சி விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது.

காலையில் பள்ளிக்கு வரும்போதுகூட ஆட்டோகாரரிடம் நாற்பது ரூபாய் கடன்சொல்லி போன் நெம்பர் வாங்கி வைத்துக் கொண்டேன்.

ஆனால் சிலரிடம் மட்டும் இலட்ச லட்சமாய் கோடி கோடியாய்ப் புது ரூபாய் சிக்குவதை நீர் அறிவீரோ..?

இருபது ரூபாய் மிச்சமாகுமென போனவாரத்திலிருந்து இருவேளையும் தேநீர்க் குடிப்பதை நிறுத்திவிட்டேன். பணமிருந்தும் எடுக்க முடியாமல், காசில்லாமல் இனி என்னையும் என் வயதான தாயையும் பிழைப்பூட்ட முடியாது.

ஒன்றே ஒன்று கேட்கிறேன்.இப்பிரச்சினை தீரும்வரை நீங்கள் என் வீட்டுக்கு வந்து எனக்கு சகோதரனாகவும் என் அம்மாவுக்கு பிள்ளையாகவும் இருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமா..? இல்லையெனில் நாங்கள் சோறு தண்ணீர் எவையுமின்றி செத்து மடிவதைத்தவிர வேறு வழியில்லை. செய்வீர்களா மோடி அண்ணா..?

Leave a Response