14 மடங்கு லாபம் தந்த படம் கோலிசோடா-விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத்  தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய ‘கோலி சோடா’  படம் வணிக ரீதியிலான வெற்றியிலும் விமர்சகர் களின் வரவேற்பிலும் பேசப்பட்டது.  ‘கோலி சோடா’ எளியவர்கள் வலிமையுள்ளவர்களாக மாறமுடியும் என்கிற நம்பிக்கையையும்  விதைத்தது.

இனி விஜய் மில்டன்…..

கொஞ்சம் உங்கள் முன்கதை?

இயக்குநர் ஆவது என்பதே எனது விருப்பம். ஆனால் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பு சேரவேண்டும் என்றால் பட்டப் படிப்பு ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.அப்போதைய என் சூழலில்  மேலும் 3 ஆண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. படித்த ப்ளஸ்டூவுடன் கிடைக்கிற ஒளிப்பதிவாளர் பிரிவில் சேர்ந்தேன். மானசீகமாக இயக்குநருக்கான தேடலுடன்தான் படித்தேன். 1991ல் முடித்தேன். அப்போது சக்தி சரவணன், வின்சென்ட் செல்வா போல 9 பேர் என் வகுப்புத் தோழர்கள்.

ஒளிப்பதிவாளராக..?

இதுவரை 25 படங்கள் பணியாற்றியிருப்பேன். எல்லாப் படங்களிலும் இயக்குநருக்கான என் தேடல்  இருந்து கொண்டேதான் இருந்தது. பெரும்பாலும் என் நண்பர்களே இயக்கியதால் மரியாதையுடன்தான் நடத்தினார்கள்.

இப்படி நான் பணியாற்றிய ‘காதல்’ ,’தீபாவளி’, ‘தயா’, ‘போஸ்’ ,’வனயுத்தம்’ ‘ஹலோ’, ‘சாக்லெட்’ ,’வழக்கு எண் 18/9′ போன்றவை மறக்க முடியாத  பட அனுபவங்கள்.

இயக்குநர் ஆனது எப்படி?

முன்பே சொன்னமாதிரி இயக்குநர் ஆவது என் விருப்பம். ஒளிப்பதிவாளர் ஆனது வேலை என்று ஆனது. ஒளிப்பதிவு செய்த போதே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தேன்.எனக்குள் அது ஒரு பக்கம் நடக்கும். ஒளிப்பதிவு வேலை ஒரு பக்கம் நடக்கும்  அப்படி உருவான ஒரு கதைதான் ‘கோலிசோடா’. அக்கதை மூலம் நம் விருப்பப்படி நட்சத்திரங்கள் யாரையும் சாராது அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.

கோலிசோடா அனுபவம்?

தயாரித்ததை கணக்கிட்டால் 14 மடங்கு லாபம் தந்த படம். சுமார் 140 திரையரங்குகளில் வெளியாகி கூடுதலாக 60 திரையரங்குகளிலும் வெளியானது. அந்த அளவுக்கு வரவேற்பு பெற்ற ஒரு படம் அது . அதில் எந்த நட்சத்திரமும் இல்லை. வெறும் 5டி கேமராவுடன் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்தபடம். என் படக்குழு மொத்தமே 20 பேர்தான் இருப்போம். எளிமையானவர்கள் வலிமையான வர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது.

மறக்க முடியாத  பாராட்டு..?

ரஜினிசார் போன் செய்தது மறக்க முடியாதது விக்ரம், விஜய் போன்ற பலரும் பாராட்டினார்கள் .அவை மறக்க முடியாதவை. எங்கள் அப்பா பாராட்டியது. தேசியவிருதுக்குச் சமமான சந்தோஷம்.

தேசியவிருதுக் குழுவினர் பாராட்டிய படம். ஆனால் மைனர் பசங்க வன்முறை என்கிற விஷயத்தால் விருது கிடைக்க வில்லை என்று கேள்விப் பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. உதவி இயக்குநர்களிடமிருந்து பாராட்டி1500 மேசேஜ்கள் வந்ததும்  மறக்க முடியாதது

இயக்கும் அடுத்த படம் பற்றி..?

நான் இப்போது இயக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள ‘ .விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஷாக்கி ஷெராப், அபிமன்யு சிங், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் நடிக்கிறார்கள்.

90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது.

விக்ரம் ஒப்பந்தமான பின்னணி?

‘கோலிசோடா’ தேடிக் கொடுத்த வாய்ப்புதான் இந்தப்படம். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் கோலி சோடாவின் சம்பளம்தான் இந்தப்படம்.

அப்படி யென்றால்  ‘கோலிசோடா’வில் பெரிய பண ஆதாயம் வர வில்லையா?

அப்படிச் சொல்ல வில்லை. கோலிசோடா மூலம் அடைந்த  பெரியஆதாயங்களில் இது ஒன்று. பெரியலாபம் இது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

சரி விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?

முதலில் அவர் ஒப்பந்தமானதே சுவாரஸ்யமானது. ‘கோலிசோடா’ படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்து விட்டு போன் செய்து பாராட்டினார். எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்றார்.ஒன் லைன் சொன்னேன். உடனே கூப்பிட்டார். அப்போது இரவு 10 மணி. வரச்சொன்னார். போய்ச கதை சொன்னேன். உடனே ஓகே செய்தார். அந்தப்படம்தான் ’10 எண்றதுக்குள்ள’ .கதை சொல்லி ’10 எண்றதுக்குள்ள’ படத்தைவிக்ரம் முடிவு செய்தார்.அவர் எவ்வளவு பெரிய நடிகர்.ஆனால் எல்லாவற்றையும் மறந்து தன்னை ஒப்படைப்பவர். அவ்வளவு ஊக்கம், அர்ப்பணிப்பு உள்ளவர். முதல்படம் மாதிரி நினைத்து நடிப்பவர். 15 வயது பையன் போல இயங்குபவர். முருகதாஸ் சாரின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

அது என்ன தலைப்பு ’10 எண்றதுக்குள்ள’?

வண்டி வாகனங்களில் போவோருக்குத்தான் ஒவ்வொரு வினாடியும் முக்கியம் என்பது தெரியும். 600மைல் வேகத்தில் செல்லும் விமானிக்கு சில வினாடிகள்கூட  முக்கியம்தான்.. தொலைவில் குறுக்கே ஏதாவது வரும் போது அந்த வினாடியில் அவர்கள் சிந்தனை,செயல்படும் வேகம் முக்கியம். லாரியில் காரில் 140கி.மீ வேகத்தில்   போகும் போது சில வினாடிகள் கூட  முக்கியம்தான். ’10 எண்றதுக்குள்ள’ என்கிற இந்த வார்த்தை பல இடங்களில், பல சூழல்களில் பிரபலம். எனவே  வேகம் நேரம் இவற்றைக்  குறிக்கும் வகையில்அதை தலைப்பாக வைத்தேன்

Leave a Response