விவசாய நலன்களுக்கு எதிரான மத்திய அரசு

மத்திய அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசரச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலங்கள் கையகப்படுத்துதல் சட்டத்தில் இருந்த வெளிப்படைத் தன்மை மற்றும் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை போன்றவையும், நிலங்களின் உரிமையாளர்கள் 70 விழுக்காட்டினர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் மத்திய அரசு நினைத்தால் எந்த இடத்தையும் கைப்பற்றலாம்.

தமிழகத்தில் விவசாயிகள் பல ஆண்டுகளாக இரயில்வே துறை,மின்சாரத் துறை,பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை,விமான போக்குவரத்துதுறை,இராணுவத்துறை,அணைகள், தொழிற்பேட்டை அமைக்க நிலம் வழங்குதல் மற்றும் எரிவாயுக்குழாய் அமைக்க நிலம் குத்தகைக்கு கொடுத்தல்  என தங்கள் விவசாய நிலத்தையும்,வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கின்றனர்.

கடந்த காலத்தில் அரசாங்கத்திற்கு நிலம் கொடுத்தோரின் வரலாற்றைத் திரும்பி பார்த்தால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தினக்கூலிகளாக வாழ்ந்து மடிந்துள்ளனர்.உதாரணத்திற்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களின்  குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று தினக்கூலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு கெயில் நிறுவனம் (PMP ACT-1962) சட்டத்தைக் காட்டி,விவசாயிகளை மிரட்டி வெறும் ரூ.11-க்கு காசோலை கொடுத்து குத்தகை என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் வளர்ச்சிப்பணிகளுக்கு எதிரானவர்கள் அல்ல.அதேசமயம் தங்கள் குடும்பத்தையும்,வாழ்வாதாரத்தையும் இழந்து அவர்கள் மத்திய,மாநில அரசுகளுக்கு நிலத்தை கொடுக்க முடியாது.மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள சட்டம் விவசாய நலன்களுக்கு எதிரானது.

எனவே விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

4 Attachments

Leave a Response