கயல்- திரைப்பட விமர்சனம்

கண் தெரியாத தந்தைக்கு மகனாகப் பிறந்த நாயகன் சந்திரன், தம்மால் முடிந்தவரை உலகைச் சுற்றிப்பார்த்துவிட நினைக்கிறார். அவருக்குத் தோதாக ஒரு நண்பரும் கிடைத்துவிட இருவரும் வருடத்தில் பாதி நாட்கள் ஊர்சுற்றுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுப்பயணத்துக்காக ஒரு இந்தியவரைபடத்தை வாங்கி அதில் இதுவரை பார்த்த பகுதிகள், இனிமேல் பார்க்கவேண்டிய பகுதிகள் ஆகியனவற்றை பச்சை மற்றும் சிவப்பு மையினால் வட்டமிட்டு வைத்திருப்பதையும் அசாம் பழங்குடியினர் பயன்படுத்தும் ஒருவகையான கத்தியை வைத்திருப்பதையும் பார்த்து அவர்களைத் தீவிரவாதிகள் என்று என்று காவல்துறை முடிவுசெய்வதும் அப்போது வாழ்க்கை குறித்த நீண்டவிளக்கத்தை கவுரவவேடத்தில் நடித்திருக்கும் பிரபு மற்றும் நாயகன் சந்திரன் ஆகியோர் சொல்லும்போது ஒரு புதியஅனுபவத்துக்கு நாமும் தயாராவது போல இருக்கிறது.

ஒவ்வொருவரும் பணம் பொருள் என்று சொத்துச் சேர்ப்பதை விட்டுவிட்டு நல்லநினைவுகளைச் சேமிக்கவேண்டும் அதுதான் ஓய்வுக்காலத்தில் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுமையும் அவர்கள் சுற்றிவந்தததைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பாடல் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாகவே அமைந்துவிட்டது. கிறிஸ்துமஸ் நாளில் கன்னியாகுமரியில் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அதற்காக வருகிற வழியில் ஊரைவிட்டு ஓடுகிற ஒரு காதல்இணையருக்கு சின்னஉதவி செய்கிறார்கள்.

அந்த இணையரும் அவர்களுடைய நண்பர்களும் தப்பிப்போய்விட இவர்கள் இருவரும் பெண்வீட்டாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டுநாட்களில் திருமணம் வைத்திருக்கும் ஜமீன்குடும்பத்தின் பெண் அவர் என்பதால் விசாரணை கடுமையாக இருக்கிறது. கடுமையான அடிஉதைகளுக்கு மத்தியிலும் சாப்பாடு கொடுங்க என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இது இன்னும் இரண்டுநாட்களுக்குத் தாங்கும் இப்ப அடிங்க என்று அவர்கள் தயாராவது சிரிக்கவைப்பதோடு வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது.

நாயகன் சந்திரன் மற்றும் அவருடைய நண்பர் வின்சென்ட் ஆகிய இருவரும் புதுமுகநடிகர்கள் போல இல்லாமல் தேர்ந்த நடிகர்களாக இருக்கிறார்கள். வின்சென்ட் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அடித்து உதைத்தும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள் என்று நினைத்து அந்த வீட்டில் வேலை செய்யும் நாயகி ஆனந்தியை அனுப்பி உண்மையை வாங்க முயல்கிறார்கள். நாயகியைப் பார்த்தவுடன் நாயகனுக்குக் காதல் வருகிறது. அதை மொத்தக்குடும்பத்தினர் முன்னிலையிலும் வைத்து நாயகியிடம் சொல்கிறார் நாயகன்.

வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகிக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. அதைத்தாங்க முடியாமல் தவித்து அவருடைய அம்மாவின் புகைப்படத்தை எடுத்துவைத்துக்கொண்டு கதறியழும்போது கண்கலங்க வைத்துவிடுகிறார். அதன்பின் அவர் காதலனைத் தேடி வீட்டைவிட்டுப் போகிறார். கடும் போராட்டங்களுக்குப் பிறகு அவர் காதலனைச் சந்திக்கும் கணத்தில் ஆழிப்பேரலை வந்து அந்தப்பகுதியையே உருக்குலைக்கிறது.

நாயகனின் பெயர் ஆரோன் என்றும் அவருடைய நண்பர் பெயரை சாக்ரடீஸ் என்றும் வைத்திருப்பதால் படத்தில் மண்மணம் குறைகிறது, காதலைச் சொல்ல இன்னும் அழுத்தமான ஓரிருகாட்சிகள் இருந்திருக்கலாம், தொடக்கத்தில் நிறைய அறிவுரைகள் ஆகிய படத்திலுள்ள சின்னக்குறைகளைத் தாண்டி ஒட்டுமொத்தப்படத்தையும் இந்த ஆழிப்பேரலைக்காட்சிகள் தூக்கி நிறுத்துகின்றன. ஆங்கிலப்படங்களைவிடச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதற்காக உழைத்த அவ்வளவு பேருக்கும் தமிழ்த்திரையுலகமே முன்னின்று பாராட்டுவிழா நடத்தலாம். படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மகேந்திரன் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

காட்சிகள் முதன்மையாக இருப்பாதாலோ என்னவோ இமான் கொஞ்சம் குறைவாகத் தெரிகிறார். பாடல்களிலேயே கவித்துவத்தோடு கதையைச் சொல்கிறார் யுகபாரதி. நாயகியின் முதலாளிகளாக நடித்திருக்கும் பெரைரா, தேவராஜ், சின்னஜமீன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர் (இவர் அடிக்கும் கூத்து திரையரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது) என்று எல்லோரும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். குறிப்பாக தேவராஜ் கவனிக்க வைக்கிறார்.

 

Leave a Response