திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்?-சீமான் கேள்வி

நாகையில் நடந்த தந்தை பெரியார்- எம்.ஜி.ஆர் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் சீமான் ஆற்றிய உரையின் சிறுபகுதி….

பல்லக்கில் பயணம் செய்பவன் புண்ணியவான்; அதைத்தூக்கிச் சுமப்பவன் பாவி என்கிறது ஆத்தீகம். பல்லக்கிலே பயணம் செய்பவன் ஆதிக்கவாதி; பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவன் ஏமாளி என்கிறது நாத்தீகம்; பகுத்தறிவு. என்னை சந்தேகிக்காதே; என்னை அப்படியே நம்பு; என்னுள் சரணடைந்துவிடு என்கிறது மதங்கள்; ஆத்தீகம். எதுவொன்றையும் சந்தேகி என்கிறது நாத்தீகம்; பகுத்தறிவு.இதைத்தான் தமிழ்மறை திருக்குறள்,எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறது.

ஏன்? எப்படி? என்ற கேள்விகளை எதற்கும் கேட்பீர் என்கிறார் சாக்ரட்டீசு. ஐந்தும், ஐந்தும் பத்து என்றால், எப்படி பத்து என்று கேள் என்கிறார் தந்தை பெரியார். பிள்ளையார் சிலையை தண்ணீரில் போட்டால் ஆத்தீகம்; தவறி தரையில் போட்டால் நாத்தீகம். நாம் அறிவியலின் பிள்ளைகள். சூரியனிலிருந்து பிரிந்து குளிர்ந்த ஒரு துகள்தான் பூமி. நீரிலிருந்துதான் எல்லா உயிர்களும் தோன்றியது. நீர் இல்லையென்றால் இங்கு எதுவும் இல்லை. நீரிலிருந்துதான் ஒரு செல் உயிரினங்கள் எல்லாம் தோன்றியது. இதைத்தான் தமிழ்மறை திருக்குறள்,’ நீரின்றி அமையாது உலகு’ என்கிறது.

‘ஒழுக்கமாக வாழ்வதுதான் வழிபாடு’ என்கிறார் தந்தை பெரியார். இதனையும்விட சுருக்கமாக, ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்கிறார். கோயில் வாசலில் பிச்சை எடுக்கிறவர்களுக்குப் போடாத காசு, கோயில் உண்டியலில் போட்டு என்ன பயன்? மனிதன் அச்சடித்த காசு கடவுளுக்கு எதற்கு? என்பதுதான் பகுத்தறிவு. தந்தை பெரியாரின் உரைகளைத்தான் எம்.ஜி.ஆர். திரையிலே வடித்தார். திரையுலகின் புகழ்பெற்ற கலைஞனாக இருந்தபோதும், தன்னை புகழ்ந்து அவர் பாடல் எழுதச்சொல்லவில்லை. ‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியிலே போட்டு வச்சோம்’ என்றோ, ‘நாட்டாமை பாதம்பட்டா வெள்ளாமை வெளயுமாடா’ என்றோ எழுதச்சொல்லவில்லை.உழைப்பவர்களைப் பாடு; பசித்திருப்பவர்களைப் பாடு என்றுதான் சொன்னார். திரையிலே மது குடித்தால், புகை பிடித்தால் அதனைப்பார்க்கிற நமது பிள்ளைகளும் குடித்துவிடுவார்கள் என்று அவர் குடிப்பதுபோல நடிக்கவில்லை. நான் சென்னைக்கு வருகிறவரை எம்.ஜி.ஆர். படங்களையே பார்த்தது இல்லை. ஈழத்தில் என் தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, 3 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தால் அதில் பெரும்நேரம் எம்.ஜி.ஆர்.ஐப் பற்றியே தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் எனப் புரிந்தது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் தலைவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அண்ணன் கிட்டுவிடம் 36 இலட்சம் பணம் கொடுத்து, ‘தம்பி! சண்டைப் போடும்போது பணத்திற்கு சிரமப்படுவான்’ என்று கொடுத்தனுப்பினார். தன் நாட்டுக்கு துரோகி என பெயரேடுத்தாலும் பரவாயில்லை; தமிழர் தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று உதவிய காரணத்தினால்தான், எம்.ஜி.ஆர்.ஐ ‘புரட்சித்தலைவர்’ என்று அழைக்கிறோம். அந்த தலைவனுக்கு இருந்த அன்பும், பற்றும்தான் அவன் பிள்ளைகளுக்கு அவன்மீது இருக்கிறது. எத்தனையோ நடிகர்களுக்கு நமது பாட்டன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாட்டெழுதியபோதும், எம்.ஜி.ஆர்.க்கு பாட்டெழுதுகிறபோதுதான் சமூக அக்கறை கொண்ட பாடல்களைத்தர முடிந்தது. அப்பேர்பட்ட மகத்தான தலைவர்கள் நம்மிடையே இல்லை.இருந்தாலும் அவர்கள் உருவாக்கிய பாதை இருக்கிறது.

இப்போது அண்ணன் வைகோ அவர்கள் மது ஒழிப்பு போராட்டம் செய்கிறார். ராஜாஜி கொட்டுகிற மழையில் கருணாநிதி வீட்டுக்கு வந்து, மது விலக்கை திரும்பப் பெற்றுவிடாதே என்றார்; அதனையும் கேட்காது மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி என்கிறார் அண்ணன் வைகோ. அப்போது கருணாநிதி பக்கத்திலே இருந்தது அண்ணன் வைகோதானே? கூட்டணியில் இருக்கும்போது வாய்க்கு பூட்டு? கூட்டணியைவிட்டு வெளியேவந்து மதுக்கடைகளுக்கு பூட்டா? தமிழ்த்தேசியம் எனும் பொது எதிரியை வீழ்த்த திமுகவும்,அதிமுகவும் ஒன்று சேரவேண்டும் என்கிறார் அண்ணன் வைகோ. திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களையும், ஊழல்களையும் பொறுத்துக்கொள்ள தயாராகிவிட்டீர்கள். ஆனால், இந்த மண்ணின் பிள்ளைகள் செய்யும் அரசியலை மட்டும் எதிர்க்கிறீர்கள். திராவிடக்கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள். எது திராவிடக்கொள்கை? மதுவுக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்ததுதான் திராவிடக்கொள்கையா? எம் மண்ணை மீத்தேன் எரிகாற்று எடுக்க அனுமதி கொடுத்ததுதான் திராவிடக் கொள்கையா? எம் கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்த்து கொடுத்ததுதான் திராவிடக்கொள்கையா? நீங்கள் திமுகவையும், அதிமுகவையும் ஒன்றுசேருங்கள். நாங்கள் இரண்டையும் களத்திலே வீழ்த்துகிறோம். நாம் தமிழர் கட்சி என்பது வெறுமனே, பதவிக்காக அல்ல! மக்களின் உதவிக்காக! நாம் தமிழர் கட்சி, பணத்திற்காக அல்ல! தமிழர் என்ற தேசிய இனத்திற்காக! நாம் தமிழர் கட்சி, பிழைப்பதற்காக அல்ல! மக்களுக்காக  உழைப்பதற்கு!!
இவ்வாறு சீமான் பேசினார்

Leave a Response