
‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் (செப்டம்பர் 27) நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 49.சென்னை ஹாரிங்டன் சாலையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. இறந்த அண்ணாமலைக்கு மனைவி மற்றும் மவுனா என்ற மகள் உள்ளனர்.
அவரைப் பற்றி அவருடைய நண்பரும் பத்திரிகையாளருமான வீ.கே.சுந்தர் எழுதியுள்ள குறிப்பில்,
வார்த்தைக்கு வலிக்கும் என்பதாலேயே எப்போது சந்தித்தாலும் “சுந்தர்..நல்லாருக்கிங்களா”என கேட்கும் அன்பு நண்பன் அண்ணாமலை ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என்று தகவல் வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.தொடர்ந்து தமிழ் சினிமா இழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது சமீபகாலமாக! கடந்த இருபத்தி ஒண்ணாம் தேதி அண்ணாமலை அலைபேசியில் அழைத்தார்.முன்பு ஒருமுறை சினிமொபிட்டாவில் வேலை பார்க்கும்போது அவரது சுயவிபர குறிப்பு கேட்டிருந்தேன்.அன்று இரவே அனுப்பி வைத்தார்.அதை ஞாபகப்படுத்தி…”நண்பா,உங்ககிட்ட அது இருந்தால் அனுப்புங்க…எங்கிட்ட காப்பி இல்ல” என்று கேட்டார்.இரவு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்தேன்.சில மன உளைச்சல்களால் அதை மறந்தும் விட்டேன்.நண்பா,,நீ யாருக்கு அனுப்ப அதைக் கேட்டாயோ தெரியாது! ஊருக்கே அனுப்புகிறேன் …மன்னித்துக்கொள் நண்பா
பாடலாசிரியர் அண்ணாமலை, பிறந்த ஊர் திருவண்ணாமலை. இவரது தாய்வழித் தாத்தாவின் குடும்பம்
அங்கிருந்ததால், அவ்வூரின் அரசு மருத்துவமனையில் பிறத்தார்.
சொந்த ஊர், விழுப்புரம் ராமசாமி படையாச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ‘கீழப்பட்டு’
என்கிற கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை அங்கே படித்தார். பிறகு, திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, தாத்தா வீட்டில் தங்கிப் படித்தார். மேல்நிலைப் படிப்பை சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்.
அப்போதே கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் சிலதில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்கியுள்ளார். பள்ளி
நாட்களில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை உயிராக நேசித்தார். எனவே, அவர் படித்த சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தால், அதே கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து அதே கல்லூரியில் எம்.ஃபில். பட்டமும் பெற்றார். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில், ‘சுரேசன்’ என்கிற புனைப்பெயரில்தான் இவர் பிரபலம். அந்தப் பெயரில் கவிதை, கதை, கட்டுரைகளும் எழுதிவந்தார். தமிழரசி, தாய் வார இதழ்களில் இவரது 6 சிறுகதைகள் வெளிவந்தன. தமிழமுது இதழில் ‘வேங்கையின் சபதம்’ என்ற பெயரில், ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய
வரலாற்று குறுநாவல் ஒன்றும் வெளியானது.
அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள் வாங்கினார்.
அப்போது, முன்னாள் பச்சையப்பன் கல்லூரி மாணவரான இயக்குனர் செல்வாவின் தொடர்பு ஏற்பட்டது.
அவர் இயக்கிய ‘சித்திரப் பாவை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன் முதலில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் பாலபாரதியின் மெட்டுக்கு,
‘எட்டாத சோலையானது,
என் தோளில் மாலையானது…
விண்மீன்கள் கூட்டமானது,
என்வாசல் தோட்டமானது’
என்று இவர் எழுதிய ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கான பாடல் வரிகளை, பாடகர் மனோ பாட… நடிகர் சிவகுமார் நடித்த அந்தத் தொடரில் இடம்பெற்றது.
அதைத் தொடர்ந்து, நீலா மாலா, கோகுலம், நரசி, அஸ்திவாரம், செல்லப்பிள்ளை, புதுயுகம், மைதிலி, தங்கம் உட்பட 15 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். அதோடு, பக்தி மற்றும் தனிப்பட்ட 25 இசைத்
தொகுப்புகளுக்கும் சேர்த்து 200 பாடல்கள் எழுதியுள்ளார்.
இவரது முதல் திரைப்பாடல், நாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992&ல் வெளிவந்த ‘புதுவயல்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மனோ, சித்ரா ஆகியோர் பாடினர். இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம், ‘கும்மாளம்’. அதில் ‘திம்சு கட்ட அடடா திம்சு கட்ட’ உட்பட மூன்று பாடல்கள் எழுதியதில் தொடங்கியது, இவரது திரைப்பாடல் பயணம். அதைத்தொடர்ந்து, ‘சேனா, ஸ்டூடன்ட் நம்பர் ஒன், மச்சி, ஜங்ஷன்’ போன்ற போன்ற சில படங்களுக்கு
பாடல் எழுதி வந்தார். ‘வேட்டைக்காரன்’ படத்தில் வந்த ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 50 படங்களுக்கு எழுதி இருக்கிறார். தற்போது 20 படங்களில் எழுதி
வருகிறார்.
இதுவரை வெளிவந்த இவரது 60 திரைப்பாடல்களில் 30 பாடல்கள் ஹிட். ‘பண்ணாரஸ் பட்டு கட்டி, ஜில்லாக்ஸ், ரத்தத்தின் ரத்தமே, என் பேரு முல்லா, நீ சிரிச்சா கொண்டாட்டம், வர்றாளே ஜில்ஜில் சிங்காரி, நண்பனைப்
பார்த்த தேதி மட்டும், உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், கொலக் குத்துக்
குத்துறா, இடிச்ச பச்சரிசி, நட்டநடு ராத்திரியை பட்டப் பகல் ஆக்கிவிட்டாய், இத்தனை யுகமாய் எங்கே இருந்தாய்’ போன்ற பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. தேவா, டி. இமான், மணிஷர்மா, விஜய் ஆண்டனி, தமன், வெங்கடேஷ், மரகதமணி, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், சுந்தர் சி.பாபு, பரணி, ஏ.ஆர்.ரைஹானா, காந்திதாசன், சரோஜ்பாபு, ஸ்ரீசாய்.வி., பத்மன், ஆல்ட்ரின், கே.பாரதி உட்பட 50 இசையமைப்பாளர்களிடம் பாடல்கள்
எழுதியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணிபுரிந்த இவர், கடைசியாக ஜூனியர் விகடன் இதழில் 5 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்தார். பாடல் எழுதும் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பொருட்டு, சில மாதங்கள் முன்பு அந்தப் பணியில் இருந்து விலகினார்.
‘ழ, நவீன விருடசம், அரும்பு, புதிய மனிதன், அன்னம் விடு தூது, தமிழோசை, பொதிகைத் தென்றல், புதிய அலைகள்’ உட்பட சிறு பத்திரிகைகளில் இவரது 50 கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆனந்தவிகடன் வார இதழில் முத்திரைக் கவிதை உட்பட 19 கவிதைகள் வெளிவந்தன. பிற வெகுஜன இதழ்களிலும் சேர்த்து இதுவரை இவரது 90 கவிதைகள் பிரசுரம் ஆகியுள்ளன. ஜூனியர் விகடனில் பணிபுரிந்தபோது, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் வெளிவந்த இவரது குத்தல் கவிதைகள், வாசகர்களிடம் பிரபலமானவை. இதுவரை, இவர் கவிதை நூல் எதுவும் வெளியிடவில்லை. சில மாதங்களில், இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு எழுதியுள்ளார்.
நண்பர்கள், குடும்பம் மட்டுமின்றி தமிழ்த்திரைப்பட ரசிகர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார் அண்ணாமலை. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் எந்நாளும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.


