
‘தினத்தந்தி’ நிறுவனர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இலக்கிய பரிசளிப்பு விழாவும், சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்த நாள் விழாவும் ‘தினத்தந்தி’ சார்பில் செப்டம்பர் 27 மாலை 6 மணிக்கு சென்னை, ராணி சீதை மன்றத்தில் நடந்தது.
விழாவுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த ஆண்டுக்கான, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது முனைவர் அருகோவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி.பாஸ்கரன் பொன்னாடை அணிவித்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை, முனைவர் தாயம்மாள் அறவாணன் பெற்றார். தாயம்மாள் அறவாணனின் ‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’ என்ற நூலுக்கு இந்தப் பரிசு கிடைத்தது. தாயம்மாள் அறவாணனுக்கு பொன்னாடை அணிவித்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி.பாஸ்கரனுக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். பின்னர், முனைவர் அருகோ, தாயம்மாள் அறவாணன் ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில், விருது பெற்ற முனைவர் அருகோ, முனைவர் தாயம்மாள் அறவாணன் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இதை தந்தி டி.வி. தயாரித்து இருந்தது.
முன்னதாக அனைவரையும் வரவேற்று ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசியதாவது:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக இலக்கியப் பரிசுகள் வழங்கும் திட்டத்தை, என் தந்தை பா.சிவந்தி ஆதித்தனார் 1995-ம் ஆண்டில் தொடங்கினார்.
கடந்த 21 ஆண்டுகளாக இந்த விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த விழாவுக்குத் தலைமை தாங்க வருகை தந்திருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.பாஸ்கரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் 20 நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர். ஜவஹர்லால் நேரு விருது, சிறந்த கல்வி மற்றும் ஆய்வாளர் விருது உள்பட பல விருதுகள் பெற்றவர்.
அவர்கள் நம் விழாவுக்கு தலைமை தாங்கி பரிசு வழங்குவது நமக்கு பெருமையும், பெரு மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த ஆண்டு மூத்த தமிழறிஞர் விருது பெறுபவர், முனைவர் அருகோ. இளம் வயதிலேயே தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய “நாம் தமிழர்” இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் ஆதித்தனார் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
பல சிரமங்களுக்கு இடையேயும் தமிழ் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக ‘எழுகதிர்’ என்ற மாத இதழை 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அவருக்கு, “மூத்த தமிழறிஞர்” விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த ஆண்டு, ‘அவ்வையார் படைப்புக்களஞ்சியம்’ என்ற சிறந்த நூல் எழுதி இலக்கியப் பரிசு பெறுபவர் முனைவர் தாயம்மாள் அறவாணன். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணனின் துணைவியார். தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியதுடன், செனகல் நாட்டுப் பல்கலைக்கழகத்தில், பல ஆண்டுகள் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவருக்கு இலக்கியப் பரிசை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
விழாவுக்கு பெருந்திரளாக வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறுகிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.
