பள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது:

ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தையும் தாங்கொணா பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தால் பெற்றோர்கள் குலை நடுங்கிப் போயிருக்கிறார்கள். பள்ளி மாணவி சக மாணவனாலேயே இத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

அந்தப் பள்ளிக்கு அருகிலேயே மதுக்கடை இருப்பதாகவும் சம்பவத்தின் போது அந்தப் படுபாதக மாணவன் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மது, எத்தகைய பேரவலங்களை எல்லாம் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிடக் கொடிய உதாரணம் தேவையில்லை.

ஒழுக்கத்தையும் நல்லெண்ணத்தையும் விதைக்க வேண்டிய கல்வித் திட்டங்கள் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்து போய்விட்டன என்பதையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் மனப்பாடப் பகுதிகளாகவும், எதற்கும் உதவாத வணிக நோக்கமாகவும் மட்டுமே நம்முடைய கல்வித்திட்டங்கள் இருக்கின்றன.

ஒரு மாணவனே சக மாணவியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரத்துக்கு அதிகாரமும் அரசு மெத்தனமும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கொலை செய்யப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதலான உதவிகளை அரசுத் தரப்பு உடனடியாகச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த மாணவன் மட்டும் அல்லாது வேறு எவரேனும் இந்தக் கொடூரத்துக்குத் துணை போனார்களா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கொடூரங்கள் மறுபடியும் நடந்து விடாதபடி தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு உரிய நெறிமுறைகளையும் பக்குவமான கற்பிதலையும் ஆசிரியர்களைக் கொண்டு சொல்லிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Response