அதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை

தமிழகம் பாலைவனமாவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்கி,நதிகள் இணைப்பை, போர்க்கால அடிப்படையில் துவக்கி, நிறைவேற்ற வேண்டும்.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.Kநாகராஜ் அறிக்கை.

  நரேந்திரமோடி தலைமையிலான அரசு நதிநீர் இணைப்பை கடந்த தேர்தலில் முக்கிய கொள்கையாக அறிவித்து வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தை மாறி, மாறி ஆண்ட கட்சிகள் கடந்த 50 ஆண்டு காலமாக நீராதாரங்களை மேம்படுத்தாமல்,சரியான திட்டமிடுதல் இல்லாமல் மழைக்காலத்தில் வெள்ள நிவாரணமும்,கோடைக்காலத்தில் வறட்சி நிவாரணமும் வழங்கி காலத்தை ஓட்டிவிட்டார்கள்.

  கர்நாடகா,காவிரியில் நீர்தர மறுத்தாலும்,கேரளாவில் முல்லைப்பெரியாறு,பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுதல் என்ற பிரச்சனை எழும்போதெல்லாம் ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் அறிக்கை கொடுத்தும்,மறியல் செய்தும், தமிழர்கள் உணர்வுகளை தட்டியெழுப்புவதோடு நிறுத்திவிடுகின்றனர்.

  பொதுவான பிரச்சனைக்கு கேரளாவில் உள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல்கொடுப்பது போல தமிழக எம்.பி.க்கள் ஒருபோதும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்ததில்லை.

  மத்திய அமைச்சரவையில் 13 மத்திய அமைச்சர்கள் இருந்த காலத்தில்கூட காவிரிநீர் பிரச்சனையில் எவ்வித நன்மையும் நடைபெறவில்லை.

தற்போது கர்நாடகாவில் மேகேதாட்டுவில் இரண்டு அணைகளும்,முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணையும்,பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணையும் கட்டும் முயற்சியில் கர்நாடகா,கேரள அரசுகள் இறங்கியுள்ளன.அதற்கு மத்திய புள்ளியியல்துறை வல்லுநர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் டெல்லி பிரதமருக்கு கடிதம் எழுதி அமைதியாகி விடுவதும்,எதிர்க்கட்சிகள் அதை அரசியலாக்கி,மக்கள் உணர்ச்சிகளை தட்டியெழுப்புவதும் கடந்த 50 ஆண்டு கால வரலாறு.அதனால் இதுவரை எந்தப்பயனும் இல்லை.

  தமிழகத்தை ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் தற்போது 37 பேர் இருந்தாலும்,அதனாலும் தமிழ்நாட்டிற்கு எவ்விதப்பயனும் இல்லை.

நதிகளை தேசிய மயமாக்கி,நதிகளை இணைத்து,நீராதாரத்தை மேம்படுத்தினால் ஒழிய தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையும்,தற்போதைய நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனம் ஆவதையும்,கேரளாவோடும்,கர்நாடகாவோடும் தமிழக அரசு தண்ணீருக்காக சண்டை போடுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் இந்தியாவில் நதிகள் இணைப்பை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.                  

Leave a Response