அரைநாள் பயன்படும் பிளாஸ்டிக்பையால் ஆயுளுக்கும் கேடு – சூழல் விழிப்புணர்வில் முன்னாள் மாணவர்கள்

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருந்துறை கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள். தென்னிந்தியாவைக் காக்கும் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆண்டுக்கொருமுறை பயணம் மேற்கொண்டு வனவளம் பேண விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்வது இவர்களது பழக்கம்.

அதன் அடிப்படையில், கொங்கு முன்னாள் மாணவர்கள், ஆகஸ்ட் 15, 2016 அன்று அதிகாலையில் தலமலை கானகப் பகுதிகளில் இருந்த சுமார் 150 கிலோ நெகிழிக் குப்பைகளைச் சேகரித்து அகற்றினர். பின் அரசினர் ஆதி திராவிடர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மூவர்ண மூவடுக்கு கேக் வெட்டி பள்ளி மாணாக்கருடன் 70-வது விடுதலை நாளைக் கொண்டாடினர். குழந்தைகளுக்கு மில்கா பிரெட் நிறுவனத்தார் வழங்கிய பிரெட் ஜாம் மற்றும் வொண்டர் கேக் வழங்கினர். நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை நினைவுகூரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்த படத்தை தலைமை ஆசிரியரிடம் டர்ன் அரவுண்ட் செயலாளர் தீபக்ராஜா வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்குகளைப் பொதுமக்களிடம் விளக்கி, கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பை எடுத்துச் சென்று, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க அறிவுறுத்தினர். அனைவருக்கும் ஈரோடு எஸ்ஆர் ஃபேஷன் வேர்ல்டு நிறுவனத்தின் துணிப்பைகள் மற்றும் சாக்குப் பைகளை வழங்கி சூழல் சீர்கேட்டைத் தடுக்க என்னென்ன செய்யவேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்தனர்.

விடுதலை நாள் சிறப்பாக சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்கு, மாணாக்கருடன் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை ஏற்றனர்:
* தண்ணீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
* வீடுகள், அலுவலகங்களில் குறைந்தது 2 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.
* பயணங்களுக்கு சொந்த வாகனங்களை தவிர்த்து, பொது வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
* வழக்கமான குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி. பல்புகளைப் பயன்படுத்தலாம்.
* “ஏசி’யில் பயன்படுத்தப்படும் “ஏர்-பில்டர்’களை மாதத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்.
* வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
* மரம் மற்றும் கிரானைட் கற்களால் செய்யப்படும் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* சூரிய சக்தியில் இயங்கும், வாட்டர்-ஹீட்டர்களை பயன்படுத்தலாம்.
* கடிதம் எழுதுவதை விட, இ-மெயில் மூலமான தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.
* ஸ்பிரே பெயின்ட்களுக்கு பதில், பிரஷ்களையோ, ரோலர்களையோ பயன்படுத்தலாம்.
* கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பை எடுத்துச் செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கலாம்.
* வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
* வெள்ளைத்தாளின் இரு புறங்களையம் பயன்படுத்த வேண்டும்.
“இது போல ஒவ்வொருவரும், அன்றாட வாழ்க்கை முறையில் மாறுதல்களைச் செய்வதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும்” என முன்னாள் மாணவர் சதீஷ்குமார் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாணவர்கள், “கடைகளில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பைகளை அரை நாள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆயுளுக்கும் அவை அழியாமல் சுற்றுச்சூழலைக் கெடுக்கும். கானுயிர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள பாலித்தீன் பைகள், பெட் பாட்டில்களால் பறவைகள், வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. இதனால் மரங்களும் காடுகளும் அழியும். இந்த வனச்சரகத்தில் வாழ்ந்துவரும் உயிரினங்களில் மனிதர்களும் அடங்குவர். எனவே வனச்சூழலை அதன் கன்னித்தன்மை கெடாமல் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை உணரவேண்டும். மனிதர்களால் காயப்படுத்தப்படாத மலை உச்சிகளில் இருந்து உருவாகும் ஓடைகள் தான் ஒன்றாகச் சேர்ந்து ஆறாக உருவாகிறது. இயற்கைச் சூழல் கெட்டாலோ விலங்குகள் அழிந்தாலோ அந்த பாதிப்பு மனிதர்களைத் தான் வந்தடையும்” என்றனர்.

“பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்யும்போது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது. இதற்குப் பதில் உயர்சுழற்சி செய்வது ஓரளவு தீர்வை ஏற்படுத்தும். உதாரணமாக, பிளாஸ்டிக் சாலைகள் போடுவது, பெட் பாட்டில்களைக் கொண்டு சுற்றுச்சுவர் அமைப்பது, மின்னணு கழிவுகளைக் கொண்டு பூச்சாடி போன்ற கைவினைப் பொருட்கள் செய்வது என இதுவரை உபயோகப்படுத்திய பிளாஸ்டிக்குகளை அழிக்கலாம்.

காடுகள் விலங்கினங்கள், பறவையினங்கள் வாழும் வீடு. நாம் செய்கின்ற தவறான காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி நமக்கே பாதிப்பை ஏற்படுத்தும். காடுகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் எடுத்துச் செல்லும் எதையும் அங்கே விட்டுவர வேண்டாம். அதே சமயம் அங்கிருந்து அழகிய நினைவுகளை மட்டும் எடுத்து வரலாம்” என்று மேலும் தெரிவித்தனர்.

70-வது விடுதலை நாள் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய கொங்கு முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். தலமலை பகுதிகளில் தேவையான இடங்களில் மரக்கன்றுகள் நட்டனர். வனவளம் காக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அனைவரும் பாராட்டினர்.

காலை 10 மணிக்கு முன்னாள் மாணவர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனையான சம்பவங்கள் மற்றும் வெற்றிக்கதைகளைப் பகிர்ந்தனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் துறைத் தலைவர்கள் பாரிவள்ளல், கனகரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். முதல்நாள் மனவளப் பயிற்சி, இரண்டாம் நாள் வனவளம் காக்கும் முயற்சி என நடைபெற்ற 2 நாள் முகாமிற்கு தலமலை சக்தி ஃபார்ம்ஸ் ஜோதீஸ்வரன், மவுண்ட் மீடியா சதாசிவன், வழக்கறிஞர் எம்.எஸ்.கே., டர்ன் அரவுண்ட் கெளரவத் தலைவர் ரவிசந்திரன், தலைவர் ராஜேஷ் ராஜப்பா, செயலாளர் தீபக் ராஜா, பொருளாளர் தினேஷ், ஒருங்கிணைப்பாளர் செழியன், நிர்வாகிகள் சோமசுந்தரம், பிரவீன், தியாகராஜன், துரைக்கண்ணன், செந்தில்வேல், அரவிந்தன், தீனதயாளன், கபிலன், பூபதிராஜா, மீரா உள்ளிட்ட 200 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டர்ன் அரவுண்ட்
நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் செழியன், “நஷ்டத்துல இருக்குற நிறுவனத்தை லாபம் தரக்கூடிய நிறுவனமாக மாற்றக்கூடிய செயலுக்குப் பெயர்தான் டர்ன் அரவுண்ட். நட்பு வட்டத்துல இருப்பவர்களை வெற்றியாளர்களாக இருக்க வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த இரண்டு நாட்கள் முகாமிற்குப் பிறகு எங்கள் சக்தியும் நம்பிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளதை உணர்கிறோம். இப்பொழுது உடலும் உள்ளமும் உற்சாகமாக அவரவர் பணிகளுக்குத் திரும்புகிறோம்” என்றார்.

Leave a Response