யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு அமெரிக்க நிறுவனம் பயிற்சி

யு.எஸ்.எயிட் எனும் அமெரிக்க நிறுவனத்தின் உதவியோடு பால் பண்ணையாளர்களுக்கான வயல் விழா வியாழக்கிழமை (11.08.2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

பண்டத்தாப்பில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டிருந்தார்.

தமிழீழப்பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பால்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கிவருகிறது.

குறிப்பாக பசுக்களில் பால் சுரப்பை சத்தான உணவின்மூலம் அதிகரிக்கும் நோக்கில் சீனி இறுங்குப் பயிரைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. அதிக அளவு சீனியைக்கொண்ட சீனி இறுங்குப்பயிர் முழுவதுமாகவே கால்நடைத்தீவனமாகப் பயன்படவல்லது. இதனை இயந்திரங்களின் உதவியோடு நறுக்கி சீனி சேர்த்து நொதிக்கவைத்து ‘சைலேஜ்’ எனப்படும் பதப்படுத்திய உணவாக நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும்.

சீனி இறுங்கில் இருந்து கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறை கால்நடைத் தீவனமாக அசோலா தாவரத்தைப்பயன்படுத்தல் போன்ற செயன்முறை விளக்கங்கள் வயல் விழாவின்போது பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டதோடு யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் பால் சேகரிக்கும் கொள்கலன்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் லிஸ் டேவ்னி ரூடவ்ஸ்ரன், டேவிட் டையா,

டாக்டர் பா.சிவயோகநாதன் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர்

டாக்டர்.சி.வசீகரன் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான பண்ணையாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இவ்வயல் விழாவின்போது யாழ்கோ, நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் மற்றும் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகியன தங்கள் காட்சிக்கூடங்களை அமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response