காவல்துறைக்கு சீருடை மாற்றம், காவல்நிலையத்துக்கு வெள்ளைநிறம் – சீமான் அதிரடி

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழக காவல்துறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகர் தொகுதியில் நடந்த நாம் தமிழர் பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில்,

நாம் தமிழர் ஆட்சியில் காவல்துறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும். காவல் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருக்க அவர்களின் நெஞ்சின் நடுவில் கமெரா பொருத்தப்படும்.

காவல்துறையை வேறு யாரோ என்று நினைக்காதீர்கள், அவர்கள் அனைவரும் நமது சொந்தக்காரர்கள். மக்களுக்கு சேவை செய்கின்ற காவல்துறையைக் கொண்டு வருவேன்.

காவல்துறையின் வேலை குற்றவாளியை பிடித்து கூண்டில் நிறுத்துவது அல்ல, ஒரு குற்றவாளியே உருவாகாத சமூகத்தை உருவாக்குவது தான் என்ற ஈழத்தலைவர் பிரபாகரனின் வாக்கை சீமான் குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட காவல்துறையை தான் நான் உருவாக்குவேன். மத்திய காவல்படைக்கு நிகரான சம்பளத்தை அளிப்பேன். காக்கி சீருடை மாற்றப்படும், காவல் நிலையத்தின் நிறம் வெள்ளை நிறமாக மாற்றப்படும்.

பின்னர் காவல்துறையைப் பார்க்கும் போது மக்களுக்கு ஒரு மதிப்பு வந்துவிடும் என கூறியுள்ளார்.

Leave a Response